ராதாகிருஷ்ணனிடம் ஜெயலலிதா மரணம் குறித்து 4 மணி நேரம் விசாரணை – பரபரப்பு வாக்குமூலம்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?, உயர் சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லாதது ஏன்? என்பது போன்று பல்வேறு கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி அவரிடம் கேட்டார்.

நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். மதியம் 2.30 மணி வரை 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில், ‘அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. மனசாட்சிக்கு உட்பட்டு ஜெயலலிதாவுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. சிகிச்சையில் எந்த குறைபாடும் கிடையாது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது எனது தாயார் இறந்து விட்டார்.

இருந்தபோதிலும் குறுகிய கால விடுமுறையில் சென்று விட்டு திரும்பிய நான், ஜெயலலிதாவை காப்பாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்’ என்று கூறி உள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சந்தேகம் இருந்ததா? என்று நீதிபதி கேட்ட கேள்விக்கு, ‘சந்தேகம் இல்லை’ என்று ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். அதேபோன்று, ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்வது குறித்து முடிவு எடுப்பதற்காக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களிடம் தெரிவித்தீர்களா? என்று ஆணையம் கேள்வி எழுப்பியது.

அதற்கு அவர், ‘அதுகுறித்து தெரிவிக்கவில்லை’ என்று பதில் அளித்தார். இதே கேள்வியை சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணையின் போது கேட்ட போது, ‘அதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு தெரிவித்தேன்’ என்று கூறி உள்ளார். இந்த முரண்பாடு குறித்து மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு பணிப்பெண்களாக இருந்த தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தேவிகா, சிவயோகம், பூமிகா ஆகியோரை புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கனகசபாபதி நேற்று ஆணையத்தில் ஆஜர்படுத்தினார். அவர்கள், போயஸ்கார்டனில் சந்தேகப்படும்படியாக எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியும் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேற்கண்ட தகவலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணை முடிந்து வெளியே வந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ‘ஆணையம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். விசாரணை நடந்து வரும் நிலையில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டது?, அதற்கு என்ன பதில் அளித்தேன் என்று கூறுவது சரியாக இருக்காது’ என்றார்.

விசாரணைக்கு பின்னர் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஓ.பன்னீர்செல்வம் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை முதல்-அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது தொடர்பாக என்னை அழைத்து பேசவில்லை என்று குறுக்கு விசாரணையின்போது ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தனது முயற்சி காரணமாகவே எய்ம்ஸ் டாக்டர்கள் தொடர்ச்சியாக வரவழைக்கப்பட்டு நுரையீரல் பிரச்சினையில் இருந்து ஜெயலலிதா மீண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டேன் என்றும், சிகிச்சையின்போது ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டன, இறந்த பிறகு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று பேசப்பட்ட விவகாரம் மனதுக்கு வேதனை அளிப்பதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!