ஆட்கடத்தல் படகுகளை தடுக்கும் ஆஸ்திரேலிய நடவடிக்கைக்கு புதிய தளபதி.

ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வர முயலும் ஆட்கடத்தல் படகுகளை தடுக்கும் ‘எல்லைகளின் ஆட்சி உரிமைக்கான நடவடிக்கை’க்கு (Operation Sovereign Borders) புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் கிராக் புர்னி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், “பாதுகாப்பு துறையில் கிராக் புர்னி கொண்டுள்ள அனுபவம் அவரை ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனிப்பதற்கான சிறந்த தகுதியுடையவராக உருவாக்கியுள்ளது” எனக் கூறியிருக்கிறார். 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நடவடிக்கையின் நான்காவது தளபதியாக கிராக் புர்னி இன்று(டிசம்பர் 14) தனது பொறுப்புகளை ஏற்றியிருக்கிறார்.

எல்லைகளின் ஆட்சி உரிமைக்கான நடவடிக்கையின் கீழ், ஆஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 34 படகுகள் நடுக்கடலில் தடுக்கப்பட்டு 800 அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர். அதே போல், 79 ஆட்கடத்தல் முயற்சிகள் தடுக்கப்பட்டதில் 2,500 மேற்பட்ட அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கிய படகுகளில் ஏறுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழலில் இந்நடவடிக்கையின் தளபதியாக பொறுப்பேற்றுள்ள கிராக் புர்னி, 1990 ஆம் ஆண்டு பாதுகாப்பு படையில் இணைந்தவர். இங்கிலாந்திலும் ஆஸ்திரேலிய உளவுத்துறையிலும் மேஜர் ஜெனரலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கூடுதலாக, ராணுவத்தில் பெரிய ஆயுதங்களை கையாளும் திறன்கொண்டவர் என்பதை விளக்கும் விதமாக அவரது அதிகாரப்பூர்வ குறிப்பில் பீரங்கி மனிதர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் ஈராக் மற்றும் சிரியாவிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இவருக்கு தனது வாழ்த்தையும் முன்னாள் தளபதியான வான்படை துணை மார்ஷல் ஓஸ்போர்னுக்கு நன்றியையும் தெரிவித்துள்ள பீட்டர் டட்டன்,“எல்லையை பாதுகாக்கும் நடவடிக்கை வலிமையானதாகவும் உறுதியானதாகவும் உள்ளது. இக்கொள்கையின் ஏதேனும் ஒரு பகுதியில் பலவீனம் ஏற்பட்டால் அது படகு வருகைகளை மீண்டும் உருவாக்கிவிடும்” என எச்சரித்துள்ளார். “ஆட்கடத்தல் அச்சுறுத்தல் ஒடுக்கப்பட்டு இருக்கின்றது, ஆனால் அது தோற்கடிக்கப்பட்டுவிட்டது எனச் சொல்ல முடியாது” எனக் கூறியிருக்கிறார் தளபதி பொறுப்பிலிருந்து விடைபெற்ற ஓஸ்போர்ன்.

எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு புதிய தலைமை வந்திருந்தாலும், இந்நடவடிக்கையில் எதுவும் மாறவில்லை எனத் தெரிவித்திருக்கிறார புதிய தளபதி புர்னி. சட்டவிரோத படகுகள் மூலம் ஆஸ்திரேலியா வர முயற்சிப்பவர்களுக்கு,“என்னுடைய கண்காணிப்பில் நீங்கள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவீர்கள்” என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!