ரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தேசிய அரசாங்கம் இல்லாதவிடத்து உத்தேச புதிய அமைச்சரவையில் 30 ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை 19 ஆவது அரசியலமைப்பின் 46(1) பிரிவிற்கமைய தெரிவு செய்ய முடியாது. அவ்வாறு அரசியலமைப்பிற்கு முரணாக ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையை நியமிக்க முற்பட்டால் நிறைவேற்று அதிகாரம் அதற்கு இடமளிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தவிசாளர் பேராசிரியர் ஜி. எல்.பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியினை பாதுகாக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் சூழ்ச்சிகளை பிரயோகித்து அரசியலமைப்பின் 46(1) அத்தியாயத்தை மீறி அமைச்சுக்களை நியமிக்க பரிந்துரைத்தால், ஜனாதிபதி அப்பரிந்துரைகளை முழுமையாக நிராகரிக்க வேண்டும். கடந்த தேசிய அரசாங்கத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக செயற்பட்டதை போன்று தற்போது பிரதமர் செயற்பட முடியாது என்பதை அவர் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் விசேட உரையில் புரிந்திருப்பார்.

அமைச்சரவையின் அமைச்சுக்களை எவ்வாறு ஒதுக்க வேண்டும் என்று அரசியலமைப்பின் 44 (3)ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சுக்கள் தொடர்பில் இறுதித் தீர்மானத்தையும் நிறைவேற்று அதிகாரமே செயற்படுத்த வேண்டும் எனவும் இப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே காணப்பட வேண்டும். ஆனால் இதற்கும் கடந்த தேசிய அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரிய தடைகளை ஏற்படுத்தியிருந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!