சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தியில் மேற்கு ஜாவா தீவில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. இதனையடுத்து அங்கு ஏற்பட்ட சுனாமி தாக்குதலின் முதல் கட்டமாக 43 பேர் பலியானதாக தகவல் வெளியானது. பின்னர் உயிர்ச்சேதம் 168 ஆக உயர்ந்தது. மேலும், 750 பேர் காயம் அடைந்தனர். 30 பேரை காணவில்லை.

இந்நிலையில், தற்போது இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலால் பலியானோருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சுந்தா எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!