சிங்கப்பூர், சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அகமது முகைதீன் (வயது 39) என்பவர் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். இதில் அவர் தனது உடமையில் 233 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதேபோன்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த தஞ்சையை சேர்ந்த ராதா கேசவன் (41) என்ற பெண் தனது உடமையில் 207 கிராம் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்திவரப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 440 கிராம். இதன் மதிப்பு ரூ.13.43 லட்சமாகும். தங்கத்தை கடத்தி வந்த முகமது முகைதீன் மற்றும் ராதா கேசவன் ஆகிய இருவரும் ஷார்ஜா, சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்துள்ளனர். விடுமுறையில் ஊருக்கு திரும்பிய அவர்களிடம் கடத்தல் கும்பல் நகைகளைக் கொடுத்து அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தங்கத்தை கொடுத்து அனுப்பிய நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!