வடக்கிலும் – தெற்கிலும் இனவாத தீயை கொழுத்த முயற்சி – சபாநாயகர்

நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டி வடக்கையும் தென்னிலங்கையினையும் கொளுத்துவதற்கான முயற்சிகள் அரசியல் நோக்கில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்றத்தின் ஜனநாயகத் தன்மையைப் பாதிக்கும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்க அனைத்து மதத்தலைவர்களும் ஆதரவு பெற்றுத்தர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய சர்வமத தலைவர்களையும் சபாநாயகர் இல்லத்தில் சந்தித்து, விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலின் போது சபாநாயகர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் சார்ந்த நலன்களுக்காக இன மற்றும் மதவாதத்தைத் தூண்டும் வகையிலான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியக் கிடைத்திருக்கின்ற நிலையில் வடக்கையும், தெற்கையும் பிரித்து சச்சரவு ஏற்படுத்த முனையும் அரசியல் பின்னணியுடனான செயற்பாடுகளுக்கு இடங்கொடுக்க கூடாது எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்தோடு எதிர்வரும் 2019 ஆம் ஆண்டில் இனவாதம், மதவாதத்தைத் தோற்கடிப்பதே பிரதான குறிக்கோளாக அமைய வேண்டும். அந்தவகையில் அரசியல் நலன்களைப் பெறுவதற்காக பௌத்த விகாரைகள் மற்றும் ஏனைய வணக்கஸ்தலங்களை இலக்கு வைத்து இனவன்முறைகளைத் தூண்டும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அனுமதிக்கக் கூடாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!