ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆணையத்தில் முன்னிலை.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் பெருமாள் சாமி முன்னிலையாகியுள்ளார். அவர் இன்று (வியாழக்கிழமை) குறித்த ஆணையத்தில் முன்னலையாகியுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவர் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை அப்பல்லோ வைத்தியசாலையின் வைத்தியர்கள் 11 பேரை முன்னிலயாகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்த போதிலும் அவர்கள் முன்னிலையாகவில்லை. இந்நிலையில் அப்பல்லோ வைத்தியசாலை தரப்பில் வழக்கறிஞர் மஹீடினா பாட்ஷா முன்னிலையாகி விளக்கம் அளித்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஆணையத்தில் முன்னிலையாகும் வைத்தியர்களின் வாக்குமூலங்கள் தவறாக பதிவு செய்யப்படுகிறது. இது ஆணையத்திற்கு எதிராகவுள்ளது. அதனால் அவற்றை சரியாக பதிவு செய்ய ஆணையத்தில் மருத்துவக் குழு அமைக்க கோரி மனு அளித்துள்ளோம்.

ஆணைய வழக்கறிஞர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிராகவுள்ளது. நாங்கள் மருத்துவக்குழுவை காலதாமதமாக கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதமே மருத்துவ குழுவை கேட்டு மனுதாக்கல் செய்துள்ளோம். மருத்துவகுழு அமைக்கப்பட்டால் மட்டுமே அப்பல்லோ மருத்துவர்கள் அளிக்கும் தகவல்களை முறையாக பதிவு செய்ய முடியும்.

ஆணையம் சார்பில் மருத்துவகுழு அமைக்கப்படும் வரை அப்பல்லோ வைத்தியர்கள் ஆணையத்தில் முன்னிலையாக மாட்டார்கள். எனவே வேறு ஒரு நாளில் வைத்தியர்களுக்கு சம்மன் அளிக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம். 21 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளோம்“ என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!