புதிய அமைச்சரவையில் ரவி, விஜேதாச – சரத் பொன்சேகாவுக்கு சட்டம் , ஒழுங்கு

புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில், ரவி கருணாநாயக்கவும், விஜேதாச ராஜபக்சவும் சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளை அடுத்தும், விஜேதாச ராஜபக்ச, அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறிய குற்றச்சாட்டை அடுத்தும் பதவி விலகியிருந்தனர்.

இந்த நிலையில் விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு ஐதேக திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, புதிய அமைச்சரவையில் திலக் மாரப்பன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம ஆகியோர் தொடர்ந்தும் அதே பொறுப்புக்களையே வகிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

எனினும், சட்டம் ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கும் ஐதேக விருப்பம் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் மே 8ஆம் நாள் நாடாளுமன்றத்தைக் கூடுவதற்கு முன்னர், புதிய அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஐதேக தரப்பில் சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!