ஜெயலலிதா சிகிச்சைக்காக செலுத்த வேண்டிய மீதமுள்ள தொகையை அதிமுக வழங்கியது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பில் இருந்து சமீபத்தில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மருத்துவ செலவு மட்டும் ரூ.6.86 கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் மருத்துவமனைக்கான மொத்த செலவு தொகையில் இருந்து அ.தி.மு.க. சார்பில் ரூ.6.41 கோடி காசோலையாக வழங்கப்பட்டதாகவும், ரூ.44 லட்சத்து 56 ஆயிரத்து 280 பாக்கி தொகையாக வழங்கவேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு செலுத்தவேண்டிய பாக்கி தொகையான ரூ.44 லட்சத்து 56 ஆயிரத்து 280 ரூபாயை காசோலையாக வழங்கியதாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஜெயலலிதா சிகிச்சைக்கான முழு செலவையும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அ.தி.மு.க. வழங்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!