நீதியரசர்கள் நியமனத்தில் அரசியலமைப்புச் சபை விடாப்பிடி

உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்களாக நியமிக்கப்படுவதற்கு, நீதியரசர்கள் துரைராஜா மற்றும் அமரசேகர ஆகியோரின் பெயர்களை அரசியலமைப்பு சபை மீண்டும் உறுதிசெய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நிலவிய இரண்டு நீதியரசர்களின் வெற்றிடத்துக்கு, நீதியரசர்கள் துரைராஜா மற்றும் அமரசேகர ஆகியோரை அரசியலமைப்பு சபை சிறிலங்கா அதிபருக்கு உறுதி செய்திருந்தது.

எனினும், இவர்களை நியமிப்பதில் இழுத்தடித்து வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மேலும் இரண்டு நீதியரசர்களின் பெயர்களையும் பரிந்துரைத்திருந்தார்.

ஆனால் நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடிய அரசியலமைப்பு சபை, ஏற்கனவே உச்சநீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்க உறுதி செய்த நீதியரசர்கள் துரைராஜா மற்றும் அமரசேகர ஆகியோரின் பெயர்களை மீண்டும் உறுதி செய்துள்ளது.

அத்துடன், உச்சநீதிமன்ற நீதியரசர் ஈவா வணசுந்தர ஓய்வுபெறுவதால், அவரது இடத்துக்கு நியமிப்பதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் பத்மன் சூரசேனவின் பெயரை சிறிலங்கா அதிபர் பரிந்துரைத்திருந்தார்.

இதனை அரசியலமைப்பு சபை ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நடந்த அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர் தலதா அத்துகோரள, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, ஜெயந்த தனபால, என்.செல்வக்குமரன், ஜாவிட் யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!