ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது -சி. வி. சண்முகம்

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது அவரது மரணத்தை சந்தேகத்திற்கு இடமான மரணம் என்று வழக்கு பதிவு செய்து, சுகாதாரத்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சட்ட அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்திருககிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது

“ஜெயலலிதாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக வைத்தியசாலை வாசலில் காத்திருந்தோம். ஜெயலலிதா இட்லி , உப்புமா உட்கொண்டார் என்று 1 கோடியே 17 லட்சம் கணக்கு எழுதியுள்ளனர்.

யார் இட்லி உட்கொண்டார், மூன்று வைத்தியர்கள் ஒஞ்சியோகிராம் செய்யச்சொல்லியும் ஏன் செய்யவில்லை? ஜெயலலிதா ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார், அவருக்கு ஒஞ்சியோகிராம் செய்யவேண்டும் எனக்கூறியதை தடுத்தது யார், வைத்தியசாலையை ஆட்டிப்படைத்த சக்தி எது?.

அந்த உண்மை தெரிய வேண்டும். ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவருக்கு வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதற்காக எயர் அம்புலன்ஸ் வழங்க மத்திய அரசு தயாராக இருந்தும் அதை ஏன் மறுத்தார்கள்?. அதற்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அனுப்பினால் வைத்தியர்களின் கௌரவம் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தார். ஒரு நோயாளியைக் குணப்படுத்த வேண்டுமே தவிர கௌரவம் பார்ப்பது வைத்தியர்களின் கௌர தான் முக்கியம் என்று பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் பின்னணியை இந்த அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும்.

ராமமோகன் ராவ் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சொன்னதாகவும், அதை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மிகப்பெரிய பொய்யை, குற்றச்சாட்டை தமிழக அமைச்சரவை மீதும், அமைச்சர்கள் மீதும் ராம மோகன்ராவ் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னும், அதன் பின்னரும் அமைச்சரவை கூடவே இல்லை அதற்கு நானே நேரடி சாட்சி. அப்படியானால் ஆணையத்தில் அமைச்சரவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் கூறினார் என்றால் அதைச் சொன்னது யார்? அவராக சொன்னாரா? அவர் பின்னணியில் இருப்பது யார்? அப்படியென்றால் ஜெயலலிதாவின் மரணத்தில் நாங்கள் எல்லாம், தொண்டர்கள் எல்லாம், இந்த நாடே சந்தேகப்பட்டதுபோல் அவரது மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆணையத்தின் இறுதி விசாரணையை முடித்து அதன் அறிக்கையை அளிப்பதற்கு முன் ஒரு இடைக்கால அறிக்கையை அளிக்க வேண்டும். ஆணையம் இதை விசாரிக்கட்டும். ஆனால் தமிழக அரசு ஒரு சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும். ஆகவே ஐ.பி.சி. 174இன்கீழ் சந்தேகமரணம் என வழக்குப்பதிவு சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்தால்தான் இதில் உண்மைகள் வெளிவரும்.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!