கழிப்பறையுடன் தென்கொரியா சென்றார் கிம் ஜாங் உன்!!

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியாவுக்குச் சென்ற போது உயர் பாதுகாப்புகளுடன், தனக்கான பிரத்யேக கழிப்பறையையும் எடுத்துச் சென்றுள்ளார்.

தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில், இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஆரம்பத்தில் சந்தித்துக் கொண்டனர். கொரிய போர் முடிந்த பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர் தென்கொரியாவுக்கு சென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரிய தலைவர் சாதாரண கழிப்பறையை உபயோகிப்பதில்லை. அவரது ரகசியங்களைப் பாதுகாப்பதற்காகவே சாதாரண கழிவறைகளை அவர் பயன்படுத்துவதில்லை என்று, வட கொரியாவின் ராணுவக் கட்டளைப் பிரிவில் பணியாற்றிய லீ யுன் கெயோல் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

சாதாரண கழிப்பறையை கிம் பயன்படுத்தினால், அவருடைய கழிவின் மூலம் தற்போதைய அவரின் உடல்நிலை மற்றும் அவரது மருத்துவ ரகசியங்கள் பற்றிய தகவல்கள் அம்பலமாகும் சாத்தியங்கள் உள்ளன.

எனவே வடகொரிய தலைவர் கிம்முடைய உடல்நிலை குறித்த ரகசியங்களை பாதுகாப்பதற்காகவே பிரத்தியேக கழிப்பறையை அவர் பயன்படுத்துவதாகவும் லீ யுன் கெயோல் கூறியுள்ளார்.

மேலும் கிம் பயன்படுத்தும் கழிப்பறை எப்போதும் உயர் பாதுகாப்புடன் தான் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வட கொரியாவில் கிம் பயணம் செய்யும் போதும் ராணுவ தளங்கள், அரச தொழிற்சாலைகள் போன்ற இடங்களிலும், அவர் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பறை அமைக்கப்பட்டு ராணுவ வீரர்களால் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

நீண்ட பயணங்களுக்கு கிம் பயன்படுத்தும் தனிப்பட்ட தொடருந்தில் மட்டுமல்லாமல் அவருடைய கார்களிலும் கூட நவீன கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளன.

தனக்கென உயர் பாதுகாப்புகளுடன் கூடிய நவீன கழிப்பறையை கிம் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பதால், அவர் தென் கொரியா செல்லும் போதும் பிரத்யேக கழிப்பறையை் கொண்டு சென்றுள்ளார் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!