அபாயா பிரச்சினைக்கு தீர்வில்லையேல் போராட்டம் வெடிக்கும் என்கிறார் ஞானசார

நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் , அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தினை மூடும் அபாயாக்கள் அணிவதை முற்றாக தடை செய்வதற்கான சட்டத்தினை கொண்டுவர வேண்டும் . அவ்வாறு இல்லாவிடின் நாட்டு மக்கள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவ , மாணவிகளுக்கு முஸ்லிம் முறைப்படி சீருடைகளை அணிய வேண்டும் என்று சில பாடசாலைகள் வலியுறுத்தி வருகின்றனர். இவைகள் ஒரு இனத்தின் தேசிய கலாச்சாரத்திற்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் வேதனையளிக்க கூடியதாகவே காணப்படுகின்றது. பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள் முழுமையாக உடம்பினை மறைக்கும் அபாயா ஆடையினை அணிந்து வருவதற்கு பாடசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அப்பிரதேசத்தில் இரண்டு சமூக மக்கள் மத்தியிலும் விரோதங்கள் ஏற்பட்டுள்ளன.

பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக முஸ்லிம் ஆசிரியர்களின் கணவன்மார் கல்வி அதிகாரிகளிடம் முறைப்பாட்டினை செய்திருக்க வேண்டும். பாடசாலைக்குள் அத்துமீறிய நிலையில் பாடசாலை அதிபரை அச்சுறுத்தியமையானது கண்டிக்கத்தக்கது. நாட்டில் உள்ள தேசிய பொது சட்டங்களுக்கு முரணாகவே முஸ்லிம் மக்கள் செயற்பட்டு வருகின்றனர்.

அதாவது நீதிமன்றங்களில் தொப்பி, மற்றும் முகத்தினை மூடும் ஆடைகளை அணியக் கூடாது என்ற பொதுவான சட்டம் தேசிய பொது பாதுகாப்பு நலன் கருதி காணப்படுகின்றது . ஆனால் இவர்கள் அதனை பின்பற்றுவது கிடையாது. தமது சமய கோட்பாடுகளை மதிப்பதாக கூறி தேசிய சட்டங்களை அவமதிக்கின்றனர். இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இந்த நிகழ்வின் பின்னர் சமூக வலைத்தளங்களில் இலங்கையின் தேசிய ஆடையான சேலையினை அவமதிக்கும் பதிவுகள் இடம் பெற்றதுடன் சிங்கள மாணவர்களின் பாடசாலை சீருடைகளை குறிப்பாக பெண் பிள்ளைகளின் சீருடைகள் தொடர்பில் மிகு அருவருக்கத்தக்க பதிவுகள் இடம்பெற்று வருகின்றது . தேசிய உடையினை பற்றி அவமதிக்கும் பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வட கிழக்கு பாடசாலைகளில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவர்கள் முஸ்லிம் மாணவர்களை போன்று ஆடை அணிய வேண்டும் என்ற முறைமை காணப்படுகின்றது. இதற்கு எதிராக தமிழ் மக்கள் இதுவரை காலமும் எவ்வித பிரச்சினைகளையும் தோற்றுவிக்கவில்லை. மனித வாழ்க்கையில் ஆடைகள் என்பது ஒரு அங்கமாகவே காணப்படுகின்றது. ஒருவரை தவறான முறையில் நோக்கமிட ஆடைகள் காரணமாக அமையாது பார்ப்பவரின் எண்ணங்களும், பார்வையும் தவறாக காணப்படும் போது நிகழ்வுகளும் தவறானதாகவே காணப்படும்.

தேசிய அரசாங்கம் இந்த சமூக பிரச்சினைக்கு விரையில் சிறந்த தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும். இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பது பெயரளவிலே காணப்படுகின்றது. ஆனால் அமைச்சுக்களின் மத்தியில் நல்லிணக்கம் சிறந்த முறையில் காணப்படுகின்றது என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!