கடவுச் சீட்டை தொலைத்த கனேடியர் : 4 மணிநேரத்தில் மீட்டுக் கொடுத்த இந்திய காவல்துறை!

கனடா, ரொறன்ரோவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது தனது கடவுச் சீட்டு மற்றும் கைத்தொலைபேசியை தொலைத்த நிலையில், மும்பை பொலிஸார் அதனை தேடி மீள அவரிடம் ஒப்படைத்துள்ளனர். டேவிட் அண்ட்ரூ டெல்லர் (வயது 30) என்ற குறித்த கனடா சுற்றுலாப் பயணி கடந்த முதலாம் திகதி இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக சென்றுள்ளார். இந்தநிலையில், மும்பை சுற்றுலா தலங்களை கண்டு களித்த பின்னர் விமானம் மூலம் நேற்று (சனிக்கிழமை) காலை 5 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து வாடகை கார் மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் காரிலேயே தனது கைத்தொலைபேசி மற்றும் கடவுச் சீட்டு அடங்கிய பையை தவறவிட்டுள்ளார். இதுகுறித்து கனடா சுற்றுலா பயணி காலை 7 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலைய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்,.

சுற்றுலா பயணி சஞ்சரித்த இடங்கள் மற்றும் விமான நிலையத்தில் இருந்த சி.சி.ரி.வி கமராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன், வாடகை கார் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு சாரதியிடம் தகவல் பெறப்பட்டது. இதன்படி 4 மணித்தியாலங்களில் கனேடிய சுற்றுலா பயணியின் பயணப் பொதி மீட்டு வழங்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!