ஜெயலலிதாவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது அதிமுக அரசு- டிடிவி தினகரன் கடும் தாக்கு

ஜெயலலிதாவின் பெயரை சொல்லி மக்களை அ.தி.மு.க. அரசு ஏமாற்றி வருவதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.ம.மு.க. சார்பில் மக்கள் சந்திப்பு பயணம் 2 நாட்கள் நடந்தது. இதில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

2-வது நாளான நேற்றும் பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து பேசினார். அப்போது வருகிற தேர்தல்களில் அ.ம.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கிராமங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுற்று பயணத்தின்போது டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தென் மாவட்டங்கள் சிறப்புடன் இருக்க வேண்டும். ஏழைகள், விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் பொது மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி தரவேண்டும் என்ற எண்ணம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. பொதுமக்களின் நிலை பரிதாபமாகத்தான் உள்ளது. அமைச்சர்கள்தான் நன்றாக உள்ளனர்.

அ.ம.மு.க. அனைத்து மதத்தினருக்கும், சமுதாயத்தினருக்கும் பொதுவான கட்சி. அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிப்போம்.

தமிழக முதல்வரும், 33 அமைச்சர்களும் டெல்லிக்கு ஏவல் வேலை செய்து வருகிறார்கள். ஜெயலலிதா பெயரை சொல்லி இந்த அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. சசிகலா சொன்னதால்தான் ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா முதல்வராக்கினார். ஆனால் அவர் வடக்கில் இருந்தவர்களுக்கு ஏஜெண்டாக மாறினார்.

பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டதால் அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து மாற்றினோம். எடப்பாடி பழனிசாமியையும் முதல்வராக்கியது சசிகலா தான். ஆனால் அவர் ஆட்சியில் அமர்ந்தவுடன் வடக்கில் உள்ளவர்கள் சொன்னதை கேட்டு சசிகலாவையும், என்னையும் கட்சியில் இருந்து நீக்கினார்.

எங்களுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் என்ன தவறு செய்தார்கள்? தமிழகத்தின் இன்றைய நிலையை மாற்றி அமைக்க மக்களவை, சட்டபேரவை தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், கொள்கை பரப்பு செயலாளர் தங்கத் தமிழ்செல்வன், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, ரத்தினசபாபதி, அமைப்பு செயலாளர்கள் வ.து.நடராஜன், ஜி.முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கவிதா சசிக்குமார், பரமக்குடி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பரமக்குடி நகர் செயலாளர் சுப்பிரமணியன், கீழக்கரை நகர் செயலாளர் கே.ஆர்.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!