நாயாறு புத்தர் சிலை – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

முல்­லைத்­தீவு – நாயாறு நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆலயத்தில் புத்தல் சிலை வைக்கப்பட்ட விவ­கா­ரத்­தில், தொல்­பொ­ருள் திணைக்­க­ளப் பணிப்­பா­ளர் நாய­கத்தை அடுத்த தவணை நீதி­மன்­றில் முற்­ப­டு­மாறு முல்­லைத்தீவு நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது. எதிர்­வ­ரும் பெப்­ர­வரி மாதம் 12ஆம் திகதி வரை அந்­தப் பகு­தி­யில் முத­லாம் தரப்­பி­னரோ இரண்­டாம் தரப்­பி­னரோ எந்­த­வி­த­மான அபி­வி­ருத்தி வேலை­க­ளை­யும் செய்­யக்­கூ­டாது என்­றும் நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

கோவில் வளா­கத்­தில் கடந்த 14ஆந் திகதி தமிழ் மக்­கள் பொங்­கல் வழி­பா­டு­க­ளுக்­கா­கச் சென்­ற­ வேளை அந்­தப் பகு­தி­யில் குடி­யி­ருக்­கும் பௌத்த பிக்­கு­வுக்­கும் மக்­க­ளுக்­கு­மி­டை­யில் முறு­கல் ஏற்­பட்­டி­ருந்­தது. அங்கு சென்ற பொலி­ஸார் அத­னைத் தீர்த்­து­வைத்த நிலை­யில் அந்த இரு­த­ரப்­பி­ன­ருமே முல்­லைத்­தீ­வில் சமா­தா­னக் குலைவை ஏற்­ப­டுத்த முற்­பட்­ட­னர் என்று பொலி­ஸார் குற்­றஞ்­சாட்டி இரு­த­ரப்­பி­ன­ருக்கு எதி­ரா­க­வும் முல்­லைத்­தீவு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­த­னர். நீதி­பதி லெனின்­கு­மார் முன்­னி­லை­யில் வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

புத்­தர் சிலை அமைக்­கப்­பட்­டது சட்­ட­வி­ரோ­த­மா­னது என்று தக­வல் அறி­யும் சட்­டத்­தின் பிர­கா­ரம் பெறப்­பட்ட தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் கிராம மக்­க­ளின் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ர­ணி­கள் தெரி­வித்­த­னர். சட்ட விரோ­த­மாக அமைக்­கப்­பட்ட புத்­தர் சிலை நேற்­று­முன்­தி­னம் பொலி­ஸார் மற்­றும் தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தி­ன­ரின் ஆத­ர­வு­டன் திறக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில் நேற்று வழக்கு விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது இரு­த­ரப்­பி­ன­ரும் தத்­த­மது வாதங்­களை முன்­வைத்­த­னர். வழக்­கின் முத­லாம் தரப்­பான பௌத்த பிக்கு சார்­பில் பெரும்­பான்­மை­யின சட்­டத்­த­ரணி ஒரு­வர் முற்­பட்­டி­ருந்­தார். வழக்கு விட­யங்­கள் குறித்து செய்­தி­யா­ளர்­கள் அவ­ரி­டம் கேட்­ட­போது கருத்­துக்­கூற மறுத்­து­விட்­டார்.

இரண்­டாம் தரப்­பி­ன­ரான ஆலய நிர்­வா­கத்­தி­னர் சார்­பில் 13சட்­டத் தர­ணி­கள் மன்­றில் முற்­பட்­ட­னர். அவர்­க­ளில் ஒரு­வ­ரான அன்­ரன் புனி­த­நா­ய­கம் தெரி­வித்­தா­வது:

முத­லாம் தரப்­பான பௌத்த பிக்­கு­வின் சார்­பில் முற்­பட்ட சட்­டத்­த­ரணி அர­சி­தழ் ஒன்­றில் தொல்­பொ­ருட் திணைக்­க­ளம் அந்­தக் குறித்த இடத்­தைத் தொல்­பொ­ருட் திணைக்­க­ளத்­துக்­கு­ரிய பகு­தி­யாக அறி­வித்­த­தாக ஒரு ஆவ­ணத்­தை­யும், குறித்த இடத்­திலே கட்­ட­டங்­க­ளைக் கட்­டு­வ­தற்கு அனு­மதி கிடைத்­தது என்­ப­தாக மற்­றொரு ஆவ­ணத்­தை­யும் சமர்ப்­பித்­தார்­கள். அந்த அர­சி­த­ழில் குறித்த இடத்­தின் பெயர் செட்­டி­மலை என­வும், செட்­டி­ம­லைக் கிரா­மம், செட்­டி­மலை கிராம அலு­வ­லர் பிரிவு என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்று மன்­றில் தெரி­வித்­த­னர்.

நாங்­கள் அதை மறுத்­து­ரைத்­தோம். அவ்­வா­றா­ன­தொரு இடம் அங்கு இல்லை என்­றும், தொல்­பொ­ருட் திணைக்­க­ளத்­தால் வழங்­கப்­பட்ட அனு­ம­திக் கடி­தத்­தில் எந்­தப் பகுதி, எந்த இடம், எவ்­வ­ளவு பரப்பு என்­பன இல்லை என்­றும்­கூறி நாங்­கள் கடும் ஆட்­சே­பனை தெரி­வித்­தோம். அத­னை­ய­டுத்து, முத­லாம் தரப்­பி­னர் இந்த விட­யத்­தைச் சுமு­க­மா­கத் தீர்ப்­ப­தற்­குச் சாத்­தி­யக்­கூறு இருப்­ப­தா­க­வும், சுமு­க­மா­கத் தீர்க்க விரும்­பு­வ­தா­க­வும் கூறி­னர்.

அத­ன­டிப்­ப­டை­யில் தொல்­பொ­ருள் திணைக்­க­ளப் பணிப்­பா­ளர் நாய­கத்தை அடுத்த தவணை நீதி­மன்­றில் முற்­ப­டு­மா­றும், வளா­கத்­தில் அபி­வி­ருத்தி வேலை­கள் இடம்­பெ­றக்­கூ­டாது என்­றும் நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

குறித்த பிணக்­குக்­கு­ரிய இடத்­தி­லுள்ள ஆல­யம் மற்­றும் விகாரை தொடர்­பாக சமா­தா­ன­மா­கத் தீர்வு எட்­ட­மு­டி­யுமா என்று ஆராய்­வ­தற்­கும், தேவை­யேற்­ப­டின் இரண்­டாம் தரப்­பான நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் கோவில் நிர்­வா­கத்­தி­னர் தமது தரப்­புக் கருத்­துக்­களை முன்­வைக்­க­லாம் என்­றும்­கூ­றிய நீதி­மன்று வழக்கை எதிர்­வ­ரும் 12ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!