கால்பந்து தொடரில் பங்கேற்கும் முதல் ஒற்றை கை கால்பந்து வீரர்!

அமெரிக்காவின் பிரபல கால்பந்து தொடரான என்எஃப்எல்லில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஒற்றை கை வீரர் என்ற பெருமையை ஷாகேம் கிரிஃபா பெற்றுள்ளார். இதற்கென நடந்த தேர்வின் ஐந்தாவது சுற்றில் சியாட்டில் சீஹாவ்க்ஸ் அணியினர் ஷாகேம்மை தங்களது அணிக்காக தேர்ந்தெடுத்தனர். விரல்கள் முழுமையாக வளர்வதற்கு சாத்தியமில்லாத நிலையில் பிறந்த இவர் தனது இடது கையை நான்காவது வயதில் துண்டிக்க நேரிட்டது.

முதலில் கல்லூரி அளவிலான போட்டிகளில் விளையாட ஆரம்பித்த கிரிஃபா, கடந்த 2016ஆம் ஆண்டு சிறந்த தடுப்பாட்டக்காரர் விருதை வென்றார். மேலும், தோற்கடிக்கப்பட முடியாத அணியாக கருதப்படும் யூனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் புளோரிடாவுக்காகவும் அவர் விளையாடினார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற என்எஃப்எல்லின் முகாமின்போது 40 அடி தூரத்தை மிகவும் வேகமாக கடந்த கிரிஃபா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் 2003ஆம் ஆண்டுக்கு பிறகு இச்சாதனையை புரிந்த முதல் தடுப்பாட்டக்காரர் என்ற பெயரையும் பெற்றார். மேலும், செயற்கை கையை கொண்டுள்ள தன்னை ஒத்த இரட்டை சகோதரரை விட மூன்று மடங்கு, அதாவது 225lb எடையை 20 முறைக்கு மேல் தூக்கினார். என்எஃப்எல்லின் சிறந்த தடுப்பாட்டக்காரர்களாக கருதப்படும் ஜேஜே வாட் மற்றும் வோன் மில்லர் ஆகியோர் தங்களது ஆச்சர்யத்தை சமூக வலைதளங்கில் பகிர்ந்தனர். தேர்வு சுற்றுக்கு முன்னர் இதுகுறித்து பேசிய கிரிஃபா, “ஒரு கையிருந்தாலும் சரி, இரண்டு கையிருந்தாலும் சரி, நீங்கள் பந்து வீரர் என்றால், நீங்கள் பந்து விளையாடலாம் என்பதை இந்த உலகத்திற்கு காட்ட விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!