சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல் போர்க்குற்றம் – என்கிறார் ஐ.நா பொதுச்செயலர்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இரண்டு சிறிலங்கா படையினர், கொல்லப்பட்டு. ஆறு பேர் காயமடைந்த தாக்குதலை, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டித்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி நேற்றுக்காலை 6.30 மணியளவில் சிறிலங்கா இராணுவ வாகனத் தொடரணி ஒன்றின் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

மாலியின் மத்திய பகுதியில் உள்ள டோன்ட்சா என்ற இடத்தில் நடந்த இந்த தாக்குதலில் கப்டன் உள்ளிட்ட இரண்டு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு சிறிலங்கா படையினர் காயமடைந்தனர் என்று ஐ.நா அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அமைதிப்படையினரை இலக்கு வைக்கும் தாக்குதல்கள் அனைத்துலக சட்டங்களின்படி போர்க்குற்றங்களாக கருதப்படும் என்று கூறியுள்ள ஐ.நா பொதுச்செயலர், இந்த தாக்குததலின் சூத்திரதாரிகளை அடையாளம் கண்டு விரைவில் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று மாலி அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!