அமெரிக்க விமானங்தாங்கிக்கு சிறிலங்காவில் இருந்து விநியோகம்

சிறிலங்காவின் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக விநியோக மையத்தில் இருந்து, அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ் விமானந்தாங்கி கப்பலுக்கான பொருட்கள் விநியோகம் நேற்று முன்தினம் தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது.

அமெரிக்க கடற்படையின் விநியோகப் பிரிவைச் சேர்ந்த C-2A Greyhound விமானம் ஒன்றும், C-40A Clipper விமானம் ஒன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஏற்றிச் சென்ற விநியோகப் பொருட்களுடன், சிறிலங்கா கடல் எல்லைக்கு அப்பால் அனைத்துலக கடற்பரப்பில் தரித்து நிற்கும் யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ் விமானந்தாங்கி கப்பலுடன் தரையிறங்கின.

உதிரிப்பாகங்கள், கருவிகள், தனிப்பட்ட அஞ்சல்கள், கடதாசிப் பொருட்கள், மற்றும் ஏனைய பொருட்கள் இந்த விநியோகத்தின் போது கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த தற்காலிக விநியோக வசதிகள் வரும் 29ஆம் நாள் வரை தொடரவுள்ளதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.

இதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஒரு பகுதியில் தனியான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!