“இந்தியாவின் நேரத்தை பொய் பேசியே மோடி வீணாக்கி விட்டார்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக தொடங்கி உள்ளன. கேரளாவிலும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆளும் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. கேரளாவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட பா.ஜனதா கட்சியும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை கருத்தில் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறது. சபரிமலை விவகாரத்தை பாராளுமன்ற தேர்தலில் கையில் எடுத்து ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை கைப்பற்ற பா.ஜ.க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது: மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகள் பயிர்க்கட்ன்களை தள்ளுபடி செய்துள்ளோம். இதேபோல், வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் மோடி செய்த தவறுகளை எல்லாம் சரிசெய்வோம்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொன்னான நேரத்தை பிரதமர் மோடி வீணாக்கி விட்டார். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் ஒன்றையும் நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியின் வருகையால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!