மாணவர்கள் சீன மொழியில் பேச எதிர்ப்பு – அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சீன மொழியில் பேச எதிர்ப்பு தெரிவித்த உதவி பேராசிரியை மெகன் நீலி ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் மெகன் நீலி. மேலும் இவர் உயிரி புள்ளியியல் துறையின் ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனராகவும் இருந்தார்.

குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சீனாவை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு மெகன் நீலி சமீபத்தில் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். அதில் “மாணவர்கள் யாரும் சீன மொழியில் பேச வேண்டாம்.

ஆங்கிலம் உங்களுக்கு அந்நிய மொழி என்பது எனக்கு புரிகிறது. ஆனால், அதனை மேம்படுத்திக் கொள்ள முயலுங்கள். தேவையற்ற விளைவுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” என்று குறிப்பிட்டார். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மெகன் நீலியின் மின்னஞ்சல் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது. மெகன் நீலியை இன வெறியர் என பலர் குற்றம் சாட்டினர்.

மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் செய்யப்படதை தொடர்ந்து, ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனர் பதவியில் இருந்து மெகன் நீலி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!