திருகோணமலையில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்க கடற்படை

பசுபிக் ஒத்துழைப்பு-2018 திட்டத்தின் கீழ், திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேர்சி, சிறிலங்காப் படையினருக்கு பயிற்சிகளையும் அளித்து வருகிறது.

திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கும் யுஎஸ்என்எஸ் மேர்சியில் உள்ள, அமெரிக்க கடற்படையின் கடல் தாக்குதல் உலங்கு வானூர்தி அணியைச் சேர்ந்த, எம்.எச்- 60 சீ ஹோக் உலங்குவானூர்திகளின் மூலம், மீட்பு உத்திகள் தொடர்பாக சிறிலங்கா படையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அனர்த்த மீட்பு பணிகளில் போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்பது தொடர்பான பயிற்சிகள் இதன்போது அளிக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, யுஎஸ்என்எஸ் மேர்சி மருத்துவமனைக் கப்பலில் உள்ள கடற்படை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், சிறிலங்கா படை மருத்துவர்களுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகின்றனர்.

மேலும், பொதுமக்களுக்கான மருத்துவ முகாம்களையும் நடத்தி வருவதுடன், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை துப்புரவு செய்தல், போன்ற சமூகப் பணிகளையும் மேற்கொள்வதுடன் விளையாட்டுகளிலும் அமெரிக்க கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!