2-வது நாளாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம்!

அரசு பணியாளர்கள் மீதான ஊழலை ஒழிக்க மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலங்களில் லோக் அயுக்தா சட்டம் 2013-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த சட்டம் மத்தியிலும், பல மாநிலங்களிலும் அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் மத்தியில் லோக்பால் மற்றும் மராட்டியத்தில் லோக்அயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நேற்று முன்தினம் காந்தியவாதி அன்னா ஹசாரே தனது சொந்த கிராமமான அமகத் நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். நேற்று 2-வது நாளாக அவரது உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.

இந்த நிலையில் அவரது கிராம மக்களும் அவருக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர். நேற்று கிராமத்தில் முழு அடைப்பு நடைபெற்றது. உண்ணாவிரதம் இருந்து வரும் 80 வயதான அன்னாஹசாரே உடல் நலனை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அவரின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த மந்திரி கிரிஷ் மகாஜனை, அன்னா ஹசாரே சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இருப்பினும் ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மந்திரி கிரிஷ் மகாஜன் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இதில் முடிவு விரைவில் எட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!