மரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்லும் 104 வயது விஞ்ஞானி

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற 104 வயதான விஞ்ஞானி டேவிட் குடால் வாழ்க்கை தரம் குறைந்து வருவதால் மரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்கிறார்.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி டேவிட் குடால். தற்போது இவருக்கு 104 வயது ஆகிறது. உடல் நலனை பாதிக்கும் வகையில் இவருக்கு நோய் எதுவும் ஏற்படவில்லை. நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறார்.

இருந்தும் அவர் உயிர்வாழ விரும்பவில்லை. மரணம் அடைய வேண்டும் என விரும்புகிறார். மரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்கிறார். இங்கு பசெல் என்ற இடத்தில் மரணத்தை வரவழைத்து தரும் நிறுவனம் உள்ளது. அங்கு தங்கி இருக்க அனுமதி பெற்றுள்ளார்.

‘நான் மகிழ்ச்சியாக இல்லை. இறக்க விரும்புகிறேன். மரணம் அடைவதை குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால் இறப்பை தடுப்பது எனக்கு கவலை அளிக்கிறது. என்னைப் போன்ற வயதான ஒருவருக்கு மரணத்தை முடிவு செய்வதற்கான உரிமை உள்பட முழுக்குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் ‘பெர்த்தில் உள்ள எடித் கோவன் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். முதுமை காரணமாக அவர் பணிபுரிய தகுதியற்றவர் என கூறி கடந்த 2016-ம் ஆண்டு 102-வது வயதில் அவரை பதவியில் இருந்து நீக்க நிர்வாகம் முற்பட்டது.

அதற்கு உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து தனது முடிவில் இருந்து பல்கலைக்கழக நிர்வாகம் பின்வாங்கியது. இவர் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஆய்வுக்கட்டுரைகளை திருத்தி வருகிறார்.

தற்போது இவர் சுவிட்சர்லாந்து செல்வதற்கான செலவுகளுக்காக ‘எக்சிட் இன்டர்நே‌ஷனல்’ என்னும் அமைப்பு நிதி திரட்டி வருகிறது. அதன் மூலம் இதுவரை 17 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் சேர்ந்துள்ளது.

விஞ்ஞானி டேவிட் குடால் வருகிற 2019-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா நகரில் மரணம் அடைய விரும்புகிறார். ஆஸ்திரேலியாவில் இறப்புக்கு உதவுதல் சட்டவிரோதமாகும். ஆனால் விக்டோரியா மாகாணத்தில் மட்டும் கடந்த ஆண்டில் தான் இதற்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!