“மம்தாவால் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது” – பா.ஜ.க. பகிரங்க எச்சரிக்கை!

பா.ஜ.க. நிர்வாகிகளை மாநிலத்துக்குள் நுழைய விடாமல் தடுக்கும் மம்தாவால் அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது என்று அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் (புதன்கிழமை) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போதே பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பா.ஜ.க. தலைவர்களை மேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைய விடாமல் மம்தா பானர்ஜி தடுக்கிறார். ஆனால் நாம் பா.ஜ.க. நிர்வாகிகள் என்றும் மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளுள் 23 தொகுதிகளில் தாமரையை மலர வைக்காமல் நாம் ஓயமாட்டோம் என்றும் அவருக்கு தெரியவில்லை. நேற்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் விமானப் பயணத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனது ஹெலிகாப்டரை தரையிறக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதே நிலை தான் தற்போது சிவராஜ் சிங் சௌஹானுக்கும் இன்று தொடர்கிறது.

பிரதமருக்கு சிறிய மைதானம் தான் ஒதுக்கப்பட்டது. அதுவும் அதற்கான அனுமதி நள்ளிரவில் தான் வழங்கப்பட்டது. இவை அனைத்தும், நமது நேரம் முடிவுக்கு வந்துவிட்டது, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தான் வெற்றி பெற போகிறது என்று அவர் புரிந்துகொண்டதை தான் வெளிப்படுத்துகிறது. ஒரு சில ஊழல்கள் குறித்தான ரகசியங்களை அந்த அதிகாரி (கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார்) சி.பி.ஐ.யிடம் தெரிவித்துவிடுவார் என்கிற அச்சத்தில் அவர் அந்த அதிகாரியை பாதுகாக்க முயற்சிக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை 65 பா.ஜ.க. நிர்வாகிகள் திரிணமூல் கட்சியைச் சேர்ந்த சமூக விரோதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதனால், நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். அதேசமயம், வன்முறையையும் கையில் எடுக்கமாட்டோம். வாக்களிக்கும் நேரத்தில் மக்கள் அனைவரும் தாமரை சின்னத்தை தான் தேர்வு செய்வார்கள் என்பதை சாத்தியப்படுத்தி இதற்கான பதிலடியை தருவோம்.

மத்தியில் பா.ஜ.க.வின் ஆட்சியின் கீழ் தான் நாடு பாதுகாப்பாக உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை கடந்து வந்து இந்திய ராணுவ வீரர்களையும் பொது மக்களையும் சுட்டுக்கொன்றனர் போன்ற விஷயங்கள் எல்லாம் தற்போது கடந்த காலங்கள் ஆகிவிட்டன.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேறியவர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்று ஒட்டுமொத்த நாடும் விரும்புகிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களான மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி உள்ளிட்டோர் இந்த நகர்வை எதிர்க்கின்றனர்.

மோடி அரசால் கொண்டு வரப்படும் அனைத்து நலத்திட்டங்களும் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்கானது. அயோத்தியில் விரைவில் பிரமாண்டமான ராமர் கோயில் அமைக்கப்படும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!