‘புனுகுப் பூனை’க்குப் பொருத்தமான பதவி – பொன்சேகாவைக் கிண்டலடிக்கும் நாமல்

அமைச்சரவை மாற்றத்தின் போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு மாத்திரமே விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“சரத் பொன்சேகாவை புனுகுப் பூனை என்று அழைப்பதுண்டு. அவருக்கு அமைச்சரவை மாற்றத்தின் மூலம், வன வாழ் உயிரினங்கள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்குப் பொருத்தமான அமைச்சுத் தான்.

ஆனால் விஜித் விஜிதமுனி சொய்சாவுக்கு கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கும் கடலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது” என்றும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

அதேவேளை, தமக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவி குறித்து திருப்தியடைந்துள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

”முன்னரை விட இப்போது கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நீடிக்கும், யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களுக்கு தீர்வு காண முயற்சிப்பேன்.

முன்னைய அமைச்சின் மூலம், ஒதுக்கப்பட்ட நிதியை அடிமட்ட மக்களுக்கு பயன்படுத்தினேன்.

புதிய அமைச்சின் மூலம் கிராமப்புற மக்களுக்கு, பணியாற்ற முடியும் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!