ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு

அடுத்த 12 மாதங்களில் ஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு ஈர்க்கும் வகையில், சீன நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இந்த உடன்பாடு, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

பீஜிங்கைத் தளமாக கொண்ட யிங்கி ட்ரவல் நிறுவனத்துடனேயே, சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள கிறீன் லீவ்ஸ் லெய்சர் நிறுவனம் இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.

சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம், 120 மில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்த்து இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சீன சுற்றுலாப் பயணிகளுக்கு சீன முறையிலான திருமணங்களை ஒழுங்கு செய்தல், தொல்பொருள் மற்றும் வரலாற்றுப் பகழ்பெற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லல், மலையேற்றம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!