விமானத்திற்குள் புழுக்கமாக இருந்ததால் காற்று வாங்க அவசர கால கதவை திறந்த பயணி கைது

சீனாவில் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் பயணி ஒருவர் காற்று வாங்குவதற்காக அவசர கால கதவுகளை திறந்த சம்பவம் நடந்துள்ளது.

சீனாவின் சென்ஜென் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது. விமானம் சரியாக புறப்படும் சமயத்தில் சென் (25) என்ற நபர் விமானத்தின் அவசர கதவுகளை திறந்து இருக்கிறார். அவசர வழியில் வெளியே செல்ல முயற்சி செய்து இருக்கிறார். இதை பார்த்த விமான பணிப்பெண்கள் உடனடியாக, விமான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். பின் விமானிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டது. இதனால் மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம் ஆனது.

இந்நிலையில், அவசர கதவை திறந்ததற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். விமானத்தினுள் காற்று இல்லாமல் புழுக்கம் அதிகமாக இருந்ததாகவும், இதையடுத்து ஜன்னலை திறப்பதாக நினைத்துக் கொண்டு அவசர கதவுகளை தவறுதலாக திறந்ததாக அவர் கூறியுள்ளார். கதவை திறந்த பின்தான், அது அவசர வழி என்று தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர் நிறைய பயணிகளுக்கு இடைஞ்சலாக இருந்ததாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானம் நின்று கொண்டிருந்த பகுதிக்கு உடனடியாக விமான பாதுகாப்பு அதிகாரிகள் வந்து அவரை கைது செய்தனர். மற்ற பயணிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு 15 நாள் சிறை தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!