உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திவிட்டு உணவுப்பொருட்களை அபகரித்த இளைஞர்கள் கைது!

நோர்த் யோர்க்கில் உணவுப்பொருட்களை வீடுகளுக்கு கொண்டுசென்று வழங்கும் ஆண் ஒருவரை கத்தியால் குத்தி, அவரிடமிருந்த உணவுப்பொருட்களை அபகரித்த சம்பவம் தொடர்பாக பதின்ம வயதினர் இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு, குறித்த அந்த உணவு விநியோகஸ்தர் ஜேன் வீதி மற்றும் ஹீத்ரோ டிரைவ் பகுதியில் இருந்த சமயம், தலைவரை மூடி குளிர் அங்கியை அணிந்திருந்த இருவர் அவரை அணுகி, கத்தியால் குத்தி, அவர் விநியோகத்திற்காக எடுத்து வந்திருந்த உணவுப்பொருட்களை அபகரித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பியோடிச் சென்றுள்ளனர்.

கத்திக் குத்துக்கு இலக்கானவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக இரண்டு பதின்மவயதினர் கைது செய்யப்பட்டுள்ளதை நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும், ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொண்டமை, கொள்ளையிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!