“2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுவிக்க உத்தரவு” – சவுதி இளவரசர்!

சவுதி அரேபியா நாட்டு சிறைகளில் பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் பல்வேறு குற்றவழக்குகளில் விசாரணை கைதியாகவும், தண்டனை பெற்ற கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் இருநாள் அரசுமுறை பயணமாக இஸ்லாமாபாத் வந்துள்ளார். நேற்று அவரை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத்-திடம் தெரிவித்தார். ஏழை தொழிலாளர்களாக சவுதிக்கு சென்ற இவர்களின் குடும்பத்தினர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் வருமானம் கிடைக்காத நிலையில் மிகுந்த சிரமப்பட்டு வருவதாக இளவரசரிடம் இம்ரான் கான் சுட்டிக்காட்டினார்.

இதனையேற்ற முஹம்மது பின் சல்மான் அல் சவுத், சவுதி அரேபியா நாட்டு சிறைகளில் உள்ள 2,107 கைதிகளை கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்யுமாறு இன்று உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்தார். மீதமுள்ள கைதிகளின் விடுதலை தொடர்பாக சவுதி அரசு பரிசீலித்து வருவதாகவும் பவாத் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு நாளை இந்தியா வரும் சவுதி இளவரசரிடம் இதே கோரிக்கையை இந்திய அரசும் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சவுதி இளவரசர் உத்தரவிட்டால் சிறிய குற்றங்களுக்காக அந்நாட்டு சிறைகளில் அடைக்கபட்டுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் விரைவில் விடுதலையாகி தாயகம் திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!