இன்று வெளியாகிறது மன்னார் புதைகுழி இரகசியம்

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட றேடியோ கார்பன் ஆய்வு அறிக்கை இன்று மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து இதுவரை 320 வரையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஆறு தெரிவு செய்யப்பட்ட எலும்புக் கூடுகளின் மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு றேடியோ கார்பன் அறிக்கை பெறப்பட்டுள்ளது.

இந்த எலும்பக்கூடுகள் புதைக்கப்பட்ட காலத்தைக் கண்டறியும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த றேடியோ கார்பன் அறிக்கை துல்லியமாக ஒரு ஆண்டை குறிப்பிட்டதாக இருக்காது என்றும், பத்தாண்டுகளுக்குட்பட்ட கால அளவையே அது உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வு அறிக்கையை சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச இன்று மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்..

இந்த எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்ட காலப்பகுதி தொடர்பான இரகசியம் வெளியான பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!