ஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்யவேண்டும்:பொதுபல சேனா

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் கடந்த காலங்களில் முறையான வழிமுறைகளை கையாண்டும் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை பௌத்தமத மகாநாயக்க தேரர்களும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இவ்விடயம் தொடர்பிலும் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

பொதுபல சேனா அமைப்பின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

அவ்வமைப்பின் இளம் பிக்குகள் குறிப்பிடுகையில்.

பௌத்த மத பாதுகாப்பினை கருத்திற் கொண்டே பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானாசார தேர்ர் மதமாற்றம் செய்ய முனையும் ஒரு சில தரப்பினருக்கும், முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் செயற்பட்டமையானது பௌத்தமதத்தினை பாதுகாக்கும் ஒரு துறவியின் கடமையாகும்.

ஆனால் இவ்விடயங்களை ஒரு தரப்பினர் தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தி இவரது கருத்துக்களை தவறான வழிமுறையில் சித்தரிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஞானசார தேர்ர் ஒரு இனவாதி என்ற பொய்யான அபிப்ராயத்தை சில அரசியல்வாதிகள் குறிப்பிட்டே தங்களை அரசியலில் அறிமுகப்படுத்தி பிரபல்யமடைந்துக் கொண்டார்கள்.

நீதிமன்றத்தின் தீர்ப்பினை எவரும் விமர்சிக்க முடியாது.ஆனால் அதற்கு முன்னர் இவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் யதார்த்தமான விடயங்களை மாத்திரம் உள்ளடக்கி அரசியல் செல்வாக்குடன் ஒன்றினைக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் கடந்த 06 மாத காலமாக நாங்கள் பல்வேறு வழிமுறைகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம் . ஜனாதிபதியிடம் பலமுறை மனுக்களை சமர்ப்பித்தும் இதுவரை காலமும் எவ்விதமான முன்னேற்றகரமான தீர்வும் கிடைக்கப் பெறவில்லை. ஞானசார தேரரது விடுதலைக்காக தற்போது முன்னெடுக்கின்ற அனைத்து விதமான முயற்சிகளையும் தொடர்ந்து செய்யவுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!