இந்தியாவில் இருந்து பழங்கள் இறக்குமதிக்கு சிறிலங்கா தடை

இந்தியாவில் இருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை தற்காலிகமாக தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் இருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது, கடைப்பிடிக்க வேண்டிய தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே, இந்த தடையை விதிக்க முடிவு செய்திருப்பதாக தேசிய தாவர நோய்த்தடுப்பு சேவை தெரிவித்துள்ளது.

இந்த தடை கடந்த டிசெம்பர் 28ஆம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வந்திருப்பதாக, தேசிய தாவர நோய்த்தடுப்பு சேவை மேலதிக பணிப்பாளர் விக்ரமஆராச்சி தெரிவித்தார்.

இந்த தடை தொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் ஊடாக, இந்திய அரசாங்கத்துக்கு விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, புதுடெல்லிக்கும், கொழும்புக்கும் இடையில் ஏற்கனவே பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் விக்ரமஆராச்சி தெரிவித்தார்.

இந்தியாவில் 6 தொடக்கம் 8 வீதம் வரையான இழங்கள் மாத்திரமே இறக்குமதி செய்யப்படுவதால் இந்தத் தடையினால், வணிகக் கேள்வியில் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் அவர் கூறினார்.

அதேவேளை சீனாவில் இருந்தே சிறிலங்கா 40 வீதமான பழங்களை இறக்குமதி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!