இந்தியாவுக்கு போட்டியாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேசிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா முகமட் குரேஷி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.

பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாகவே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவுடனான உறவுகளுக்கு தமது நாடு பெரிய முக்கியத்துவம் அளிப்பதாகவும், முக்கியமான அண்டை நாடாகவும் நட்பு நாடாகவும் சிறிலங்கா இருப்பதாகவும், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் உறுதிநிலையை பேணுவதில் பாகிஸ்தான் பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது, தெற்காசியாவில் உறுதிநிலையை பேணுவதற்கு எல்லா நாடுகளும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 44 இந்தியப்படையினர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ உள்ளிட்ட பல நாடுகளின் தூதுவர்களை இந்திய வெளிவிவகாரச் செயலர் சந்தித்து, பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவது குறித்த பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!