ஊடகவியலாளர் படுகொலைகள் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் – சுமந்திரன்

தர்மரட்ணம் சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்தும், நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த வேட்கை நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“சில ஊடகவியலாளரின் படுகொலைகள் பற்றி விசாரிக்க சிலருக்கு விருப்பமில்லை. ஏனெனில் அவர்கள் இப்போது எங்களுடன் தானே இருக்கின்றார்கள் எனும் ஆதங்கம் உண்டு.

எங்களுடன் நின்றால் என்ன, எழுக தமிழுடன் நின்றால் என்ன, உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர் லசந்த படுகொலை தொடர்பாக, குற்றப் புலனாய்வு ப் பிரிவினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச இரண்டு, மூன்று தடவைகள் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

தன்னைப் பற்றி லசந்த அவதூறாக எழுகின்றார் எனவும், இனி எழுதக் கூடாது எனவும், லசந்த படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு பெற்றிருந்தார் பாதுகாப்பு செயலார் கோத்தாபய ராஜபக்ச.

லசந்தவின் படுகொலை வழக்கில், முதலாவது வழக்கு தவணையின் முன்னிலையாகி விட்டு வீட்டுக்கு வந்த போது, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் எனது படத்தையும் என்னுடன் முன்னிலையான இளம் சட்டத்தரணிகளின் படங்களை போட்டு “கறுப்பு கோர்ட் போட்ட துரோகிகள்” என கட்டுரை எழுதி இருந்தார்கள்.

அதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், இரண்டு வாரங்களின் பின்னரே பின்னரே நீக்கினார்கள்.

லசந்த கொலை வழக்கில் கோத்தபாய ராஜபக்சவை ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் குறுக்கு விசாரணை செய்திருந்தேன்.

ஆனால் அது தொடர்பில் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!