அரசியல் உறுதியின்மையால் மோசமான நெருக்கடிக்குள் சிறிலங்கா – கோத்தா குற்றச்சாட்டு

அரசியல் உறுதியற்ற நிலை, வெளிப்படைத்தன்மை இல்லாமை, முடிவெடுக்கும் நடைமுறைகளில் உள்ள பலவீனம் ஆகியவற்றினால், நாடு இன்று நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கம்பகாவில் எலிய அமைப்பின் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“வெளிநாட்டில் இருந்து வந்திருந்த அரசாங்க அதிகாரி ஒருவரை அண்மையில் சந்தித்த போது, நாட்டின் தற்போதைய நெருக்கடி குறித்து கரிசனையை வெளியிட்டிருந்தேன்.

கடந்த நான்கு ஆண்டுகளில் சிறிலங்காவினால் புதிதாக நேரடி முதலீட்டு வாய்ப்புகளைப் பெற முடியவில்லை.

ராஜபக்ச அரசாங்கம் அபிவிருத்தி நோக்கங்களுக்காகவே சீனாவிடம் நிதியுதவி பெற்றது என்பதை அவரிடம் உறுதிப்படுத்தினேன்.

சிறிலங்காவின் கேந்திர அமைவிடத்தினால் தான், சீனாவின் முதலீடுகள் தொடர்பாக சில நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன என்பதை நான் ஒப்புக் கொண்டதுடன், சீனாவைப் பற்றிக் கவலைப்படாமல், இங்கு முதலீடுகளைச் செய்வதற்கு முன்வருமாறு அந்த அதிகாரியிடம் தான் அழைப்பு விடுத்தேன்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாத்திரமன்றி, உள்நாட்டு முதலீட்டாளர்களும் கூட, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கூட இல்லாத அரசாங்கத்தினால் தொடருகின்ற அரசியல் நெருக்கடியையிட்டு கவலை கொண்டுள்ளனர்.

நிலையான அரசியல் சூழல் இல்லாமையால், சிறிலங்கா வெளிநாட்டு முதலீடுகளை இழந்து வருகிறது.

முக்கியமான கொள்கைகளை நடைமுறைப்படுத்த பலமான அரசாங்கம் ஒன்று தேவை.

சம்பந்தப்பட்ட துறைக்குப் பொறுப்பாக அமைச்சர் மாறும் போது, கொள்கைகளும் மாறுகின்றதால் சிறிலங்காவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழிப்பதில் மகிந்த ராஜபக்ச உறுதியான கொள்கையைப் பின்பற்றியதால் தான் அதனை சாதிக்க முடிந்தது.

முந்தைய அரசாங்கம் தவறுகளைச் செய்திருந்தால், நாம் விரும்பிய முடிவுகளை அடைந்திருக்க முடியாது.

மிக் -27 போர் விமானக் கொள்வனவு தொடர்பாக குற்றம்சாட்டப்படுகிறது, ஆனால் அந்தக் கொள்வனவின் போது தேவையான எல்லா நடைமுறைகளும் பின்பற்றப்பட்டிருந்தன.

2001-2014இல் ஐதேக ஆட்சிக்காலத்தில் தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக விமானப்படை கூறியதுடன், தமது தாக்குதல் பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தது.

புலிகளுடன் போர் நிறுத்தம் செய்திருந்த காலத்தில், ஐதேக அரசாங்கம் விமானப்படையின் கோரிக்கையை நிராகரித்திருந்தது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் எல்லா ஆயுதக் கொள்வனவுகளின் போதும், தேவையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!