பங்களாதேசில் விமானத்தை கடத்த முயன்ற நபர் சுட்டுக்கொலை

பங்களாதேசில் கைத்துப்பாக்கியை காண்பித்து விமானத்தை கடத்த முயன்ற நபர் ஒருவர் விசேட படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தலைநகர் டாக்காவிலிருந்து துபாய் செல்லவிருந்த பிமான் எயர்லைன்சின் விமானத்தை கடத்த முயன்றார் என்ற சந்தேகத்தில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளதாக பங்களாதேசின் விமானப்போக்குவரத்து துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

டாக்காவிலிருந்து புறப்பட்ட விமானம் சிட்டஹொங்கில் உள்ள சா அமானட் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய பின்னர் விசேட படைப்பிரிவினர் விமானத்திற்குள் நுழைந்து சந்தேகநபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாங்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவேளை 25 வயது நபர் ஒருவர் காயமடைந்தார் பின்னர் அவர் மரணமடைந்தார் என இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அவரை கைதுசெய்ய முயன்றோம் ஆனால் அவர் சரணடைய மறுத்தார் இதன் காரணமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளவேண்டி வந்தது என இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பங்களாதேஸ் பிரஜை அவரிடமிருந்து கைத்துப்பாக்கியை மீட்டுள்ளோம் எனவும் இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபர் விமானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் செயற்பட்டார் எனவும் விமானத்தை கடத்தப்போவதாக தெரிவித்தார் எனவும் இதனை தொடர்ந்து விமானப்பணியாளர்கள் இது குறித்து விமானவோட்டிகளிற்கு அறிவித்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் பின்னர் சா அமானட் விமானநிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டவுடன் விசேட படைப்பிரிவினர் விமானத்தை உடனடியாக சுற்றிவளைத்துள்ளனர்.

விமானத்திலிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் எவருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!