போதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை – கைவிரித்த கர்நாடக முதல்வர்

4 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ள நிலையில், அணையில் போதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால் கர்நாடக தேர்தல் முடியும் வரை இந்த பிரச்சனையை இழுத்தடிக்க மத்திய அரசு தீவிரம் காட்டுவதாகவும், வழக்கு விசாரணைக்கு வரும்போது மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த சூழ்நிலையில், காவிரி செயல் திட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் வரைவு செயல் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை என்று கூறி கூடுதல் அவகாசம் கேட்டது.

இதையடுத்து, காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இதுவரை மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

அதேசமயம், தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர். பின்னர் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், கர்நாடக அணைகளில் போதுமான அளவு நீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!