ஊடக சுதந்திரம் என்றும் பலம் மிக்கதே!!

உல­கத்­தில் பல நாடு­க­ளில் ஜன­நா­ய­கம் செழித்து வாழ்ந்து கொண்­டி­ருந்­தா­லும், ஊடக சுதந்­தி­ரம் என்­ப­து ஜனநாயகத்தின் பலமிக்கதொரு தூணாக விளங்­கி­வ­ரு­கின்­றது. ஊடக சுதந்­தி­ரம் என்­பது செய்திகளை வௌியி­டு­கின்ற நிறு­வ­னங்­கள் சுதந்­தி­ர­மாக தமது எண்­ணங்­களை, கருத்­துக்­களை செய்­தி­க­ளாக, கட்­டுரை ஆக்­கங்­க­ளாக வௌிப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய உரி­மை­யா­கும்.

ஒரு நாட்­டின் ஜன­நா­யக சுதந்­தி­ரத்தை வெளிப்­ப­டுத்­து­வது, அந்த நாட்­டின் ஊடக சுதந்­தி­ரமே

எந்தவொரு நாட்­டில் ஊட­கத்­து­றைக்­கும், ஊட­க­வி­ய­லா­ளர்களுக்­கும் சுதந்­தி­ர­மும், பாது­காப்­பும் கிட்டியுள்ளதோ, அந்த நாட்டில் ஜன­நா­ய­கம் பாது­காக்­கப்­பட்டு நல்­லாட்சி நடை­பெ­று­வ­து­டன், மக்­க­ளின் வாழ்­வா­தா­ர­மும் பல்­வேறு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­ற­வும், ஒற்­று­மை­யும் பேணப்­பட்டு வரு­கின்­றது என்பதை உறுதிசெய்திட இயலும்.

பத்­தி­ரி­கை­கள், ஊட­கங்­கள், ஊட­க­வி­ய­லா­ளர்­கள் ஆகி­யோர்­க­ளது உரி­மை­க­ளை­யும், சுதந்­தி­ரத்­தை­ யும் பாது­காக்­கும் பொறுப்பு, அந்­தந்த நாட்டு அர­சுக்­க­ளுக்­கு­ரிய கடப்­பா­டா­கும். ஊட­கங்­கள் வரி­சை­யில் பத்­தி­ரி­கை­கள், சஞ்­சி­கை­கள், தொலைக்­காட்­சி­கள், வானொ­லி­கள், புத்­த­க­வௌி­யீ­டு­கள் மற்­றும் சமூக வலைத்­த­ளங்­கள் என்­பவை அடங்­கு­கின்­றன. உல­கத்­தில் இருக்­கக்­கூ­டிய பெரும்­பா­லான மொழி­க­ளி­லும் பத்­தி­ரி­கை­கள் தின­மும் வௌிவந்து கொண்­டி­ருக்­கின்­றன.

ஊட­கத்­து­றை­யில் தின­மும் வெளி­யா­கின்ற பத்­தி­ரி­கை­கள் உல­கத்­தின் அர­சி­ய­லை­யும் ஆட்­சி­யை­யும் கவிழ்க்­கக்­கூ­டிய, மாற்­றத்­தை ஏற்படுத்தவல்ல சக்தி பெற்­ற­வை­யாக இன்­றும் விளங்கி வரு­கின்­றன. ஊடக சட்­டங்­க­ளின் கீழ் கருத்­துக்­களை வௌியி­டும் சுதந்­தி­ரம் என்­பது ஒரு வரை­ய­றைக்­குள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பத்­தி­ரி­கை­க­ள் உல­கத்­தின் கண்­ணாடி
எனக் கரு­தப்­ப­டுபவை

கோடிக்­க­ணக்­கான மக்­கள் பத்­தி­ரி­கைச் செய்­தி­களை வாசிப்­ப­தில் ஆர்­வ­முள்­ள­வர்­க­ளாக இருந்து வரு­கின்­ற­னர். உல­கத்­தின் புதி­னங்­களை, நாட்டு நடப்­புக்­களை அறி­வ­தி­லும், செய்­தி­க­ளின் உண்­மைத்­தன்­மை­க­ளைப் பகிர்­வ­தி­லும், விமர்­ச­னம் செய்­வ­தி­லும் அக்­க­றை­கொண்­ட­வர்­க­ளாக அவர்­கள் இருக்­கின்­ற­னர். அத­னால்­தான் பத்­தி­ரி­கை­கள் உல­கத்­தின் கண்­ணாடி எனக் கொள்­ளப்­ப­டு­கின்­றன. பத்­தி­ரி­கை­யின் வாசிப்­பும், அதன்­மூ­லம் ஏற்­ப­டும் தாக்­க­மும் உலக அரங்­கில் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன.

சட்­டம் என்­பது எவ­ரை­யும் வேறு­ப­டுத்­திக் காட்­ட­வில்லை. சட்­டத்­தின் முன் சக­ல­ரும் சம­மா­ன­வர்­கள். வெகு­சன ஊட­கங்­கள் மற்­றும் தொடர்­பா­டல் என்­பவை யுனெஸ்­கோ­வின் கொள்­கைத் திட்­டங்­க­ளின் கீழ் அடங்­கு­கின்­றன. ஊட­கம் தொடர்­பாக உல­க­ளா­விய ரீதி­யில் நடத்­தப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்­க­ளின் ஒரு அம்­ச­மாக யுனெஸ்கோ 14பேர் கொண்ட ஆணைக்­கு­ழு­வொன்றை 1972 ஆம் ஆண்டு அமைத்­தது. ஊட­கங்­க­ளின் பங்­க­ளிப்­புக்­கள், ஊட­கங்­கள் எதிர் நோக்­கும் பிரச்­சி­னை­கள் பற்றி ஆராய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட அந்த ஆணைக்­கு­ழு­வுக்கு அயர்­லாந்து தேசத்­தைச் சேர்ந்த சைம் மக்­கீல்ட் என்­ப­வர் தலைமை தாங்­கி­னார்.

குறித்த ஆணைக்­குழு பல நாடு­க­ளில் விசா­ர­ணை­கள், ஆய்­வு­களை நடத்தி ஊட­கங்­க­ளின் செயற்­பா­டு­கள் பற்­றி­யும், பங்­க­ளிப்­புக்­கள் பற்­றி­யும் பல முன்­மொ­ழி­வு­களை முன்­வைத்­தி­ருந்­தது. முன்­மொ­ழி­வு­கள் யாவும் ஒன்று சேர்க்­கப்­பட்டு பெரி­ய­தொரு புத்­த­க­மாக 1980ஆம் ஆண்டு வௌியி­டப்­பட்­டது. ஆணைக்­கு­ழு­வின் அறிக்­கை­யில் ஊட­கங்­க­ளின் பங்­க­ளிப்­புத் தொடர்­பாக எட்டு முக்­கிய விட­யங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டி­ருந்­தன.
தக­வல் வழங்­கு­தல், சமூ­க­ம­யப்­ப­டுத்­தல், ஊக்­கு­வித்­தல், விவா­தங்­க­ளும் கலந்­து­ரை­யா­டல்­க­ளும் ,அறி­வூட்­டல், கலா­சா­ரப் பரம்­பல், பொழுது போக்கு மற்­றும் ஒருங்­கி­ணைத்­தல் ஆகி­ய­வற்­று­டன் ஒருங்­க­மைக்­கப்­ப­ட்ட­வையே அவை­யா­கும்.

ஆரோக்­கி­ய­மான ஊடகச் செயற்­பாடுகள்
நாட்­டுக்கு அவ­சி­ய­மானவை

மக்­கள் தமது கிரா­மத்­தில், நக­ரத்­தில், நாட்­டில், உல­கத்­தில் என்ன நடை­பெ­று­கின்­றது என்­பது பற்றி அறிந்­து­கொள்ள வேண்­டும். சரி­யான தக­வல்­களை அறிந்­து­கொள்ள வேண்­டும். ஊட­கங்­கள் மக்­க­ளுக்கு சரி­யான தக­வல்­களை, அறிவை வழங்கி, சமூ­கத்தை பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து மீட்­டெ­டுப்­ப­தற்கு உதவ வேண்­டும். நாளாந்­தம் நடை­பெ­று­கின்ற சம்­ப­வங்­கள், செயற்­பா­டு­களை மக்­க­ளுக்கு செய்­தி­கள் மூலம் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும். ஊட­கங்­கள் ஒரு சமூ­கம் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னைகள் குறித்த விவா­தங்­க­ளை­யும், கலந்­து­ரை­யா­டல்­க­ளை­யும் நடத்­து­வ­து­டன் சில விட­யங்­க­ளைப் பகி­ரங்­கப்­ப­டுத்தி மக்­கள் சரி­யான தீர்­மா­னங்­களை எடுப்­ப­தற்கு உத­வி­ய­ளிக்க வேண்­டும்.

20ஆம் மற்­றும் 21ஆம் நூற்­றாண்­டில் அறி­வுத் திறன் மிக­வும் வேக­மான வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது. அறி­வுத்­தி­றன் இரண்டு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. இதன் மூலம் மக்­கள் விவ­சாய சமூ­கத்­தி­லி­ருந்து அறி­வுத்­தி­றன் கூடிய சமூ­கத்­திற்கு முன்­னே­றி­யுள்­ள­னர். எனவே புதிய முயற்­சி­கள், நவீன தொழில்­நுட்­பம், விஞ்­ஞா­னக் கண்­டு­பி­டிப்­புக்­கள் என்­பவை பற்றி ஊட­கங்­கள் மக்­க­ளுக்கு அறி­வூட்­ட­ வேண்­டிய கடப்­பாட்டைக் கொண்­டுள்­ளன.

கலா­சா­ரம் பற்­றிய விழிப்­பு­ணர்வு அல்­லது கலா சா­ரத்தை மக்­கள் மத்­தி­யில் பரப்­பு­வ­தன் மூலம் நாட்­டின் அபி­வி­ருத்­திக்­கும் பாரம்­ப­ரிய வளர்ச்­சிக்­கும் ஊட­கங்­கள் உறு­து­ணை­யாக அமை­ய­மு­டி­யும். இது­வும் வெகு­சன ஊட­கங்­க­ளின் முக்­கிய கட­மை­யா­கும். ஊட­கங்­கள் மக்­க­ளுக்கு பொழு­து­போக்­குச் சாத­ன­ங்களாக அமை­ய­வேண்­டு­மென சைம்­மக்­கீல்ட் துணைக்­குழு கூறு­கின்­றது. சஞ்­சி­கை­கள், குறி­யீ­டு­கள், நாட­கங்­கள், நாட்­டி­யம், ஒலி, ஓவி­யம், நகைச்­சுவை, விளை­யாட்டு போன்­ற­வற்­றால் மக்­களை மகிழ்­வித்­தல் அல்­லது பொழு­து­போக்க உத­வி­ய­ளித்­தல் இதன் குறிக்­கோள் ஆகி­றது.

சைம்­மக்­கீல்ட் ஆணைக்­குழு இறு­தி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருப்­பது ஊட­கங்­க­ளின் ஓர் இணைப்­புப் பணியே. மாறு­பட்ட சமூ­கங்­க­ளுக்­கி­டை­யில் சமத்­து­வத்­தைப் பேணு­வது என இது அர்த்­தப்­ப­டு­கின்­றது. இப்­படியான எட்டு விட­யங்­களை இது உள்­ள­டக்­கி­யுள்­ளது.

உல­கத்­தில் ஏறக்­கு­றைய 200 நாடு­கள் இருக்­கின்­றன. ஐ. நா. சபை­யில் 192 நாடு­கள் வரை­யில் அங்­கத்­து­வம் வகிக்­கின்­றன. சகல நாடு­கள் மத்­தி­யி­லும் கலா­சார வேறு­பா­டு­கள் உள்­ளன. வேறு­பட்ட கலா­சா­ரங்­க­ளுக்­கி­டை­யில் சமத்­து­வத்­தை­யும், சமா­தா­னத்­தை­யும் பேணி சமூ­கங்­களை விட்­டுக்­கொ­டுப்­பு­டன் செயற்­ப­ட­வைப்­பதே ஊட­கங்­க­ளின் பங்­கா­கும்.

இலங்­கை­யில் கடும் பாதிப்புக்கு உள்ளான
ஊடக சுதந்திரம்

ஊட­க சுதந்­தி­ரம், இலங்­கை­யில் சிறப்­பா­ன­தா­கப் பேணப்­ப­ட­வில்லை என்­பது கடந்த பத்­து­வ­ரு­டங்­க­ளுக்கு மேலாக முன்­வைக்­கப்­பட்டு வரும் குற்­றச்­சாட்­டா­கும். மூவின மக்­கள் வாழு­கின்ற இலங்­கை­யில் சிறு­பான்­மை ­யி­ன­மா­கிய தமி­ழி­னம், விடு­த­லை­வேண்டி ஆயு­த­வ­ழி­யில் தமது போராட்­டத்தை 1983ஆம் ஆண்டில் ஆரம்­பித்த காலம்­தொட்டு இன்று வரை­யில் , பத்­தி­ரி­கைச் சுதந்­தி­ர­மும், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளும், ஊட­கங்­க­ளும் பல்­வேறு பாதிப்­புக்­க­ளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தமை வர­லாற்­றுப் பதி­வு­கள்.

நாட்­டி­லுள்ள அர­சு­க­ளுக்கு எதி­ரான போர்­க­ளி­னால் ஊட­க­ சு­தந்­தி­ரம் மற்­றும் செய்­தி­களை வௌியி­டும் உரி­மை­கள் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. ஊட­க­வி­ய­லா­ளர்­கள் பலர் பல தியா­கங்­க­ளை­யும், பல­கட்­டங்­க­ளில் தமது உயிர்­க­ளை­யும் பலி கொடுக்­க­வேண்­டி­ய­தொரு நிலை­யும் ஏற்­பட்­டி­ருந்­தது. ஊட­கத்­தொ­ழிலை நேர­டி­யாக மக்­க­ளோடு தொடர்பு பேணி ஆற்ற முடி­யாத அள­வுக்கு ஊட­க­வி­ய­லா­ளர்­கள் பல அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­ற­னர்.

அச்­சு­றுத்­தல்­கள், தொந்­த­ர­வு­கள், செய்­தித்­த­ணிக்­கை­கள், கட்­டுப்­பா­டு­கள் போன்­ற­வற்­றுக்கு முகங்­கொ­டுக்­க­ வேண்­டி­ யி­ருந்­த­து­டன், பல துன்­பங்­க­ளுக்கு மத்­தி­யில் ஊடக சுதந்­தி­ரத்­திற்­கா­க­வும், தொடர்ந்து தக­வல்­களை வழங்­கும் சுதந்­தி­ரத்­திற்­கா­க­வும் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

உல­கில் வாழ்­வ­தற்கு மிக­வும் சவா­லான , பயங்­க­ர­நா­டு­க­ளில் இலங்­கை­யும் ஒன்­றென பன்னாட்டு ஊடக சுதந்­திர ஸ்தாப­னத்­தின் மூல­மாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. பரிஸ் நாட்­டி­லுள்ள ( RSF ) ஆர் .எஸ் .எப். எனப்­ப­டும் ஊடக ஸ்தாப­னம் பத்­தி­ரி­கைச் சுதந்­தி­ரத்­திற்கு உல­கத்­தி­லேயே மிக­வும் குறைந்­த­ளவு மதிப்­புக் கொடுக்­கின்ற நாடு இலங்கை என­, 2013ஆம் ஆண்­டில் குற்­றம் சுமத்­தி­யி­ருந்­தது. ஊட­க­வி­ய­லா­ள­ரைப்­பா­து­காக்­கும் குழு எனப்­ப­டும் அமைப்பு தயா­ரித்த ஊட­கத்­துக்கு தீமை விளை­விக்­கும் நாடு­க­ளின் அட்­ட­வ­ணை­யில் இலங்கை முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யின் போர்க்­கா­லப்­ப­கு­தி­யில் கொல்­லப்­பட்ட மற்­றும் காணா­மல் போன ஊட­க­வி­ய­லா­ளர்­கள், எழுத்­தா­ளர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மெ­னக் கணக்­கி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. முன்­னை­நாள் அர­சுத் தலை­வ­ரான சந்­தி­ரிகா அம்­மை­யா­ரின் ஆட்­சிக்­கா­லத்­தில், சுதந்­திர ஊட­க­வி­ய­லா­ளர் மயில்­வா­க­னம் நிம­ல­ரா­ஜன், மட்­டக்­க­ளப்­பில் எஸ். நடே­சன், யாழ்ப்­பா­ணம் ஈழ­நாடு பத்­தி­ரி­கை­யில் பணி­யாற்­றிய ஐ. சண்­மு­க­லிங்­கம், தராக்கி சிவ­ராம் போன்ற ஊட­க­வி­ய­லா­ளர்­கள் 2000ஆண்­டி­லி­ருந்து 2005ஆம் ஆண்­டுக்­கி­டை­யில் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­த­து­டன், 2006ஆம் ஆண்­டில் ‘சுட­ரொளி’ பத்­தி­ரி­கை­யின் ஊட­க­வி­ய­லா­ள­ரான சுகிர்­த­ரா­ஜ­னும் திரு­கோ­ண­ம­லை­யில் வைத்­துப் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தார். 1990ஆம் ஆண்டு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆட்­சி­யில் ரிச்­சர்ட் சொய்சா, அத­னைத் தொடர்ந்து லேக்­ஹெ­வுஸ் பத்­தி­ரி­கை­யா­ளர் எம். செல்­வ­ராஜா உட்­பட பலர் கொல்­லப்­பட்­டும், கடத்­தப்­பட்­டும் காணா­மலும் போயி­ருந்­த­னர். அவர்­க­ளில் பல­ரின் நிலை­மை­ என்ன வென்பது கூட இன்­று­வரை தெரி­ய­வில்லை.

2006 – 2008க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையில்
ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்

ஜன­வரி 2006ஆம் ஆண்­டி­லி­ருந்து டிசம்­பர் மாதம் 2008வரை­யில் இலங்கையில் பல ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தா­க­வும், 20இற்கு மேற்­பட்ட அனு­ப­வம் வாய்ந்த ஊட­க­வி­ய­லா­ளர்­கள் அர­சி­யல் தஞ்­சம் கோரி வௌிநா­டு­க­ளில் தஞ்­ச­டைந்­துள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எல்­லை­க­ளற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­கள் அமைப்பு முன்­னர் வௌியிட்ட அறிக்­கை­யில் சுதந்­திர சுட்­டெண் வரி­சை­யில் 169நாடு­க­ளின் வரி­சை­யில் இலங்கை 153ஆவது இடத்­தில் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

முன்­னை­நாள் அர­சுத்­த­லை­வ­ரான மகிந்த ராஜா­பக்­ச­வின் ஆட்­சி­யில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளது நிலை­மை­யும், ஊட­கங்­க­ளின­தும் சுதந்­தி­ர­மும் பல மடங்கு மோச­மா­கி­விட்­டி­ருந்­த­தாக பல­ தரப்புகளினாலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. போர் இடம்­பெற்ற வேளை­யில் தமி­ழி­னத்­துக்­கெ­தி­ராக மேற்­கொள் ளப்­பட்ட கொடு­மை­களை பல தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் உல­கத்­தின் முன்­னால் வௌிக் கொண்­டு­வந்­த­னர். மும்­மொழி மூலம் தங்­க­ளது கருத்­துக்­க­ளைப் பதிவு செய்­தி­ருந்­த­னர். இதற்­கெல்­லாம் பரி­சாக படு­கொ­லை­களை ஆட்­சி­யா­ளர்­க­ளும், தமிழ்த் துரோ­கக் கும்­பல்­க­ளும் வழங்­கி­யி­ருந்­தன.

போர் இடம்­பெற்ற காலத்­தில் 1987 இல் இந்­தி­யப்­ப­டை­க­ளி­னால் முர­சொலி, ஈழ­நா­தம் பத்­தி­ரி­கை­கள் குண்டு வைத்து தாக்­கப்­பட்­டன. மகிந்த ஆட்­சிக்­கா­லத்­தில் ஊடக உத­வி­யா­ளர்­கள், ஊட­க­வி­ய­லா­ளர்­கள் என பலர் படுகொலை செய்­யப்­பட்­டி­ருந்­த­னர்.

நாடொன்­றில் ஜன­நா­ய­கம் பாது­காக்­கப்­பட
ஊட­கங்­களால் உதவ இய­லும்

நாட்­டின் தமிழ் ஊட­கத்­து­றை­யா­னது, கடந்­த­கால ஆட்­சி­யா­ளர்­க­ளை­யும், இன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளை­யும் நம்­பிப் பய­னிக்க முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. படு­கொலை செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளின் விட­யத்­தில் இன்­று­வரை எந்­த­வித நீதி விசா­ர­ணை­யும் முன்­னெ­டுக்­க ப் படவில்லை. வடக்கு கிழக்­கில் படு­கொலை செய்­யப்­பட்ட பல ஊட­க­வியலாளர்­க­ளில் ஒரு ஊட­க­வி­ய­லா­ள­ருக்­கு­ரிய விசா­ர­ணை­க­ளைக்கூட இது­வ­ரை­யில் நல்­லாட்சி அரசு ஆரம்­பித்­த­தில்லை.

ஊட­க­வி­ய­லா­ள­ரான தராக்கி சிவ­ரா­மின் படு­கொ­லைக்கு 13 ஆண்­டு­க­ளா­கி­யும் நீதி கிடைக்­க­வில்லை. ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான நீதி இந்த நாட்­டில் மறுக்­கப்­பட்­டுள்­ளது. மாறி மாறி வரு­கின்ற அர­சு­கள், தொடர்ந்­தும் தமிழ் ஊட­கத்­து­றையை ஏமாற்றி வந்­துள்­ளன.

இலங்­கை­யில் சகல மொழி ஊட­கங்­க­ளும், தமிழ், சிங்­கள, முஸ்­லிம் மக்­க­ளி­டையே சமா­தா­னத்­தை­யும், சக வாழ்­வை­யும் ஏற்­ப­டுத்த வேண்­டும். தமிழ் ஊட­கங்­க­ளைப்­பொ­றுத்த வரை­யில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வா­னது, சுமு­க­மாகத்­தீர்க்­கப்­ப­ட­ வேண்­டும். மூவி­ன­மக்­க­க­ளும் சம உரி­மை­க­ளோடு வாழ வேண்­டும். ஜன­நா­யக ஆட்சி நடை­பெற வேண்­டும். குறிப்­பாக போரால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளின் தற்­போ­தைய அவல நிலை மற்­றும், வேத­னை­களை அச்சு ஊட­கங்­கள் இன்­றும் ஒரே குர­லில் எடுத்­துச் சொல்­கின்­றன. அனைத்துத் தமிழ் ஊட­கங்­க­ளின் பணி­யா­னது முக்­கி­ய­மா­ன­தா­கவே இன்­றும் இருந்து வரு­கின்­றது.

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளின் பங்­க­ளிப்­புக்­க­ளும், அர்ப்­ப­ணிப்­புக்­க­ளும் போற்­று­தற்­கு­ரி­யவை. சர்­வ­தே­சம் வரை கொண்டு செல்­லக்­கூ­டிய தமி­ழி­னத்­தின் சகல பிரச்­சி­னை­க­ளுக்­கும் மறை­முக அச்­சு­றுத்­தல்­கள் இல்­லா­ம­லில்லை. அப்­ப­டிப்­பட்ட நிலை­யில் மேலும் மேலும் உண்­மைச் சம்­ப­வங்­களை துணிச்­ச­லோடு மக்­கள்­மத்­தி­யில் கொண்டு செல்­கின்ற, மேலோங்­கிய பணி ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கும் பத்­தி­ரி­கை­க­ளுக்­கும் என்­றும் முக்­கிய கட­மை­க­ளாக இருக்­க­வேண்­டும். உல­கத்­தின் பார்­வை­யில் போர் இடம்­பெற்ற காலத்­தி­லும், அதற்­குப் பின்­ன­ரான காலங்­க­ளி­லும், இலங்கை அர­சி­னால் தமிழ் மக்­க­ளுக்­கெ­தி­ராக சிங்கள ஆட்சி யாளர்களால் மேற்­கொள்­ளப்­பட்ட அனைத்து அரா­ஜக நட­வ­டிக்­கை­கள் இன்று அம்­ப­லத்­துக்கு வந்த பின்­னர், இலங்கை அர­சும் அவை குறித்து அஞ்­சிக் கொண்­டி­ருப்­ப­தை­யும் அவ­தா­னிக்க முடி­கி­றது.வௌிநாட்­டி­லி­ருந்து வரு­கின்ற இராஜ தந்­தி­ரி­கள் பத்­தி­ரி­கைத்­து­றை சார்ந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்து உரை­யா­டு­வ­தற்­கும் தமிழ்ப்­பத்­தி­ரி­கை­க­ளும் முக்­கிய கார­ண­மா­கும். உலக ஊடக சுதந்­திர தின­மா­கிய இன்று (03.05.2018) ஊட­கப்­ப­ணி­கள் சிறப்­பு­டன் தொடர வேண்­டு­மென வற்­பு­றத்­து­வதை எமது கடமை எனக் கருத வேண்­டும். இலங்கை மக்­க­ளின் தீர்­வுக்­கும் சமா­தா­னத்­துக்­கும் ஊடகங்களது பங் களிப்பு தொடர வேண்­டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!