சிறப்பு அதிரடிப்படைக்கு அதிநவீன ஆயுதங்கள் கொள்வனவு

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைக்கு, அதி நவீன ஆயுதங்கள் புதிதாக கொள்வனவு செய்து வழங்கப்படவுள்ளதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர். லதீப் தெரிவித்துள்ளார்.

”பாதாள உலக குழுக்களின் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில், ஈடுபடும் போது, சிறப்பு அதிரடிப்படையினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், சிறப்பு ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளன.

சிறப்பு அதிரடிப்படையினருக்குத் தேவையான, பெருமளவு ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் பாதுகாப்பு அமைச்சு ஈடுபட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இந்த ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இதுபற்றி சில நாடுகளுடன் பேசியுள்ளோம். எனினும், கலந்துரையாடிய நாடுகளில் சீனா உள்ளடங்கவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, சிறப்பு அதிரடிப்படையினரின் தேவைக்காக 1000 துப்பாக்கிகள், அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்படவுள்ளதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ள ஆயுதங்களில் எம்- 16 துப்பாக்கிகள்-500, எம்.பி-5 உபஇயந்திரத் துப்பாக்கிகள்- 250, கைத்துப்பாக்கிகள்-250 என்பன அடங்கியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!