மனைவியை கைவிட்டுசென்ற 45 கணவர்களின் கடவுசீட்டுக்கள் ரத்து

மனைவியை கைவிட்டுச் சென்ற 45 வெளிநாடு வாழ் இந்தியர்களின் கடவு சீட்டுக்களை மத்திய அரசு இரத்து செய்துள்ளது என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலர் இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு, மனைவியை கைவிட்டுச் செல்லும் சம்பவம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“வெளிநாடுவாழ் இந்தியர் திருமணங்களில் தலைமறைவான கணவர்கள் தொடர்பான புகார்களை ஆராய ஒருங்கிணைந்த பல்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவான கணவர்கள் தொடர்பாக இந்தக் குழு லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்து வருகிறது.

இதுவரை 45 பேரின் கடவு சீட்டுக்களை வெளிவிவகார அமைச்சகம் ரத்து செய்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களால் கைவிடப்படும் பெண்களுக்கு நீதி வழங்குவதற்காக, ஒரு மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால் அந்த மசோதா அங்கு முடங்கியிருப்பது வருத்தம் அளிக்கிறது” என்றார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய்நாட்டில் திருமணம் செய்துகொண்டால், அதை பதிவு செய்வதை குறித்த மசோதா கட்டாயமாக்குகிறது. மேலும் 1967ஆம் ஆண்டு கடவு சீட்டு சட்டம், 1973ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய வழிவகுக்கிறது.

வெளிவிவகார துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, உள்துறை மற்றும் சட்டத் துறையின் கூட்டு முயற்சியால் இந்த மசோதா உருவாக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!