பாலியல் துஷ்பிரயோக புகாரளித்த பெண், ஏமாற்றமளித்த தீர்ப்பு!

பொதுவாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்கள் தங்கள் பெயரோ, புகைப்படங்களோ வெளியாவதை விரும்பாத நிலையில், தன்னைக் குறித்த அடையாளங்களை வெளியிட்ட ஒரு பெண் நீதி கேட்டு நீதிமன்றம் சென்றார். ஆனால் பொலிசார் அவளை நடத்திய விதமும், குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தண்டனையும் அவரை ஏமாற்றமடையச் செய்ததோடு, அவரது வேதனையை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. வான்கூவரைச் சேர்ந்த 17 வயதான Sam Fazio என்னும் இளம்பெண் நடனத்திற்கு சென்றிருந்தபோது, அவருக்கு அறிமுகமான 16 வயது இளைஞன் ஒருவனால் அங்கிருந்த கழிவறையினருகே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். விவரிக்க முடியாத அளவு முரட்டுத்தனமான அந்த வல்லுறவால், கழிவறையின் தரையெல்லாம் இரத்தமாக மாறியது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட Fazioவின் பெண்ணுறுப்பு சொல்ல முடியாத அளவுக்கு சிதைந்திருந்தது. திருமணமாகாத ஒரு இளம்பெண்ணின் அந்தரங்கம், அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு தையல்கள் இடப்படும் அளவுக்கு சேதமடைந்திருந்தது. வழக்கமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுபவர்கள் பத்திரிகைகளுக்கு முகம் காட்ட விரும்பாத நிலையில், தனக்கு ஏற்பட்ட பாதிப்பை வெளியிட அதிரடியாக முடிவெடுத்தார் Fazio. ஆனால் அதன் பின் அவர் அனுபவித்த கொடுமைகள் பாலியல் துஷ்பிரயோகத்தின்போது அவர் அனுபவித்த வேதனையைவிட அதிக வேதனையை உண்டுபண்ணின.

மருத்துவமனையில் உடலும் மனமும் நோக படுத்திருந்த Fazioவை சந்தித்த பொலிசார், அவர் என்ன உடை அணிந்திருந்தார், குடித்தாரா, அந்த நபருக்கும் அவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருக்கிறதா என்ற அடிப்படையில் கேள்விகள் கேட்டார்கள். ஒருபடி மேலே போய், அவரது வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அந்த குற்றவாளிக்கு வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே சிறைத்தண்டனை விதித்தார்.

அத்துடன், இந்த பிரச்சினையால் அந்த இளைஞன் தன்னுடைய பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியாமல் போனதாகவும், இனிமேல் அவனால் சமுதாயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தீர்ப்பளித்திருந்தார். ஒரு இளம்பெண்ணை இரத்தம் கொட்டுமளவுக்கு வல்லுறவுக்குள்ளாக்கி, உடலும் மனமும் பாதிக்குமளவிற்கு கொடூர செயலைச் செய்த ஒரு குற்றவாளிக்கு, அவன் 16 வயதுடையவன் என்ற ஒரே காரணத்தால் வழங்கப்பட்ட அநீதியான தண்டனை அனைவரது மனங்களையும் கொந்தளிக்கச் செய்தது.

ஏராளமானோர் நீதிமன்றம் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த நீதிபதியை பதவியிலிருந்த அகற்ற வேண்டும் என்று கோரி 75,000 பேர் வரை கையெழுத்திட்ட ஒரு புகார் மனு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளான பலரிடமிருந்து Fazioவுக்கு ஆறுதல் செய்திகள் வருவது ஒரு புறமிருக்க, மறுபுறம், வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதை யாரிடமும் கூறாமல் மறைத்த பல பெண்கள், Fazioவின் தைரியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தங்கள் பெற்றோரிடம் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சொல்லும் தைரியம் பெற்றிருக்கிறார்கள். Fazio சார்பில் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை கடினமாக்கக் கோரி மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!