ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கே இனி நியமனம்! – பிரதமர் அறிவிப்பு

எதிர்காலத்தில் அனைத்துப் பாடசாலைகளிலும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய போதனாபீட டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டில் நவீன கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குப் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். ஒரு இலட்சம் என்ற இலக்கில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வருட இறுதிக்குள் 90 ஆயிரம் பேராக அதிகரித்து அடுத்த வருடத்தில் இலக்கை எட்டிப்பிடிப்போம். நாம் எமது நாட்டில் குறுகி வாழமுடியாது உலகை எட்டிப்பிடிக்க வேண்டும். அதனை அடைவதற்கு நவீன கல்வி முறைகளைக் கிராமிய மட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

தற்போது நாட்டில் உள்ள பாடசாலைகளில் 80 ஆயிரம் டிப்ளோமா பட்டதாரிகள் கல்வி கற்பித்து வருகின்றனர். பயிற்சிபெறாத அனைத்து ஆசிரியர்களுக்கும் டிப்ளோமா பயிற்சியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் கல்வியமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் பாடசாலைகளில் பயிற்சிபெறாத ஆசிரியர்களே அதிகமாகக் காணப்பட்டனர். எந்தப் பாடசாலையை எடுத்துக்கொண்டாலும் பயிற்சிபெற்றவர்கள் ஒருவர் அல்லது இருவரே காணப்பட்டனர். அன்று நான் ஓர் உறுதிப்பாட்டை எடுத்தேன். கல்வித்துறையில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களை உருவாக்க வேண்டுமென்பதே அந்த எண்ணமாகும்.

எனது அந்தக்கனவை நனவாக்க முப்பது வருடங்கள் பிடித்துள்ளது. 15 வருடங்களுக்குள் இதனைச் செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால், அரசியல் மாற்றங்களால் அது சாத்தியப்படாமல் போனது. எதிர்காலத்தில் அரசாங்கம் பயிற்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கும் எண்ணம் கிடையாது. கல்வி டிப்ளோமாப் பயிற்சியைப் பெற்றுக்கொடுத்த பின்னரே நியமனங்கள் வழங்கப்படும்.என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!