சீன தயாரிப்பு பொருட்களால் சிறிலங்காவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை – அஜித் பெரேரா

சீனத் தயாரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பாக, சிறிலங்காவுக்கு எந்த பாதுகாப்புக் கரிசனையும் இல்லை என்று சிறிலங்காவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

உலகில் சீனாவின் Huawei நிறுவனத்தின் தயாரிப்புகளைப பயன்படுத்தும் 170 நாடுகளில் சிறிலங்காவும் உள்ளடங்கியுள்ளது. Huawei நிறுவனத்தின் நிறுவனர், சீன இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், பல நாடுகள் Huawei நிறுவனத்தின் தயாரிப்பான கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து கரிசனையை வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் அஜித் பெரேரா,

”வணிகமும், அரசியலும் இரண்டு வேறுபட்ட விடயங்கள். நாம் அவை இரண்டையும் கலந்து விடக் கூடாது.

Huawei தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்ட சீன உற்பத்திகளை சிறிலங்கா பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் சிறிலங்கா பயன்படுத்துகிறது.

அரசியல் ரீதியாக நாடுகள் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருக்கலாம்.

Huawei நிறுவுனர் சீன இராணுவத்தில் பணியாற்றியவர் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதனால் என்ன?

பல தலைமை நிறைவேற்று அதிகாரிகள் இராணுவத்தில் பணியாற்றியவர்களாக இருக்கிறார்கள்.

அதனால் அவர்களின் வணிக தயாரிப்புகள் இராணுவ அல்லது அரசியல் சார்ந்ததாக இருக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!