வாட்ஸ்அப், வலை தளங்களை கவனமுடன் கையாளுங்கள்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

மாணவர்கள் கவனத்தை சிதறடிக்கும் வலைதளங்கள், வாட்ஸ் அப் ஆகியவற்றை கவனமுடன் கையாள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:-

தமிழ்நாட்டை கல்வியில் சிறந்த தமிழ்நாடாக மாற்றிய பெருமை அம்மாவை சாரும். அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் குக்கிராமங்களிலிருந்து படித்து வந்த இளைஞர்கள் கூட, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் இந்திய தொழில்நுட்பத் தேர்வுகளிலும் அதிக அளவில் வெற்றி பெறத் தொடங்கினர்.

2011-ம் ஆண்டு வரை உயர் கல்வியில் படிக்கின்ற மாணவர் சேர்க்கை விழுக்காடு 21 ஆக இருந்தது. இன்று உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விழுக்காடு 46.90 ஆக உயர்ந்திருக்கிறது.

கல்வியிலே செய்த புரட்சி மாற்றத்தின் விளைவாக, இன்றைக்கு உயர்கல்வி படிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை உயர்ந்து இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அதற்கு அம்மா வகுத்துக் கொடுத்த கல்வித் திட்டங்கள்தான் காரணம்.

தேர்வில் வெற்றி பெறுவது அல்ல முழுமையான வெற்றி! வாழ்க்கையில் வெற்றி பெறுவதுதான் உண்மையான வெற்றி!

போட்டிகளில் முதன்மையான இடங்களை பிடிப்பது முழுமையான வெற்றி அல்ல. முன்னேறிக் கொண்டே இருப்பதுதான் உண்மையான வெற்றி!

உங்கள் முன்னேற்றத்திற்கு முதலீடு நீங்கள் செலவழிக்கும் நேரம்தான். உங்கள் நேரம்தான் உங்கள் வாழ்க்கை. உங்கள் வாழ்க்கைதான் நீங்கள் இந்த சமுதாயத்திற்கு சொல்லும் செய்தி!

இன்றைக்கு உங்களுக்கு பலவிதமான ஆசைகளைக் கூறி உங்கள் கல்வியை பாழ்படுத்த பல சுயநல சக்திகள் உருவாகி வருகின்றன.

அவர்களுடைய போலி வாக்குறுதிகளை நம்பாமல் உங்களை பெற்றெடுத்த பெற்றோருக்கு நல்ல பிள்ளைகளாக, நம்பிக்கைக்குரிய பிள்ளையாக நீங்கள் கடமையாற்ற, உங்கள் வழியில் கடுமையாக உழைத்து முன்னேறுங்கள்.

இன்று மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கும் வலைதளங்கள், வாட்ஸ் அப், சின்னத்திரை, பெரிய திரை போன்றவற்றில் உங்களின் பொன்னான நேரத்தை செலவழிக்காமல், உங்கள் அறிவுக்கு தேவையான செய்திகளை பெறும் சாதனமாக மட்டுமே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உண்மையான செய்திகளை மட்டுமே நம்புங்கள். போலியான அவதூறான செய்திகள் அலங்காரமாக வந்து உங்களை மயக்கக் கூடும்.

அதையெல்லாம் நம்பி திசைமாறி விடாதீர்கள். சிறந்த ஆற்றலும், வலிமையான சக்தியும் உங்களிடம் ஏராளமாக பொதிந்து கிடக்கின்றன.

உங்களை நீங்கள் முழுமையாக புரிந்து கொண்டால், வெற்றிகள் உங்களைத் தேடி வரும். இதை ஒரு நிகழ்வின் மூலம் கூறினால் உங்களுக்கு நன்கு விளங்கும் என கருதுகிறேன்.

இளைஞன் ஒருவன் குருவிடம் சென்று, “குருவே, நான் தோற்றுக் கொண்டே இருக்கிறேன். வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் ஏதாவது இருந்தால் கூறுங்கள்” என்று கேட்டான்.

அதற்கு குரு, “தோற்று விடுவோம் என்ற உன் தாழ்வு மனப்பான்மையையும், தோல்வி மனப்பான்மையும் தூக்கி எறிந்துவிடு, மற்றவர்களைக் கவர்ந்து இழுக்குமாறு உன் தோற்றம் அமைய வேண்டும்.

அதற்கு ஒரே வழி, கழுதை அழுக்கு பொதியை சுமப்பது போல, உன் மனதுக்குள் இருக்கும் கவலைகள், வருத்தங்கள் போன்றவற்றை சுமக்காமல், அவற்றை இறக்கி வைத்து விடு. உன் தோற்றம் பொலிவு பெற்று மற்றவர்களைக் கவரக்கூடியதாக மாறும்.

நினைப்பதை மிக உயர்வாக நினை. அவ்வாறு நினைத்தால், உன்னுடைய ஏழ்மைத் தன்மை, வறுமை ஆகியவற்றிலிருந்து நீ விடுதலை பெறுவாய்.

நீ எப்போதும் நியாயத்தை மட்டுமே பேசு. எதையும் கூர்மையாக உற்று நோக்கு. நீ எங்கே சென்றாலும், கூடவே மகிழ்ச்சியையும் எடுத்துச்செல்.

நல்லதை மட்டுமே நினை. உன் எண்ணம் போலத் தான் நீ வளர்வாய். உன் மனதிற்கு நீ அடங்கக் கூடாது. உனக்கு மனம் அடங்க வேண்டும். எதுவும் எளிதில் கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படாதே, உழைத்துப் பெறப்படுவது தான் நீண்ட நாள் நிலைக்கும்.

யாராலும் செய்ய முடியாது என்று மற்றவர்கள் நிராகரித்ததை, சவாலாக எடுத்து நீ செய்து காட்டு. நான் கூறியவற்றை பின் பற்றினால், உனக்கு நிச்சயமாக வெற்றி கிட்டும்”, என்று குரு கூறினார்.

மேலே குரு தனது சீட னுக்கு கூறிய வெற்றி மந்திரங்கள் அந்த இளைஞனுக்கு மட்டுமல்ல, இதனை, இங்கே இருக்கிற அத்தனை இளைஞர்களும் பின்பற்றினால், தோல்வி என்பது உங்களை ஒருபோதும் நெருங்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி. அன்பழகன், விஜயகுமார் எம்.பி., எஸ்.ஜெயச்சந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!