சபரிமலைக்கு சென்ற மற்றொரு பெண் திருப்பி அனுப்பப்பட்டார்

பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை சென்ற கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஐயப்ப பக்தர்களின் அறிவுரையை ஏற்று திரும்பிச் சென்றுள்ளார்.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது பங்குனி உத்திர திருவிழாவுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் தரிசனத்திற்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது. அதே சமயம் பாரம்பரியத்தை மீறக்கூடாது என்று கூறி சபரிமலை செல்லும் இளம்பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகிறார்கள்.

இதனால் சபரிமலையில் மேலதிக பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பங்குனி உத்திர திருவிழாவுக்கு நடை திறந்த பிறகு சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற 2 ஆந்திர இளம்பெண்களை ஏற்கெனவே ஐயப்ப பக்தர்கள் திருப்பி அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கர்நாடகாவில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் குழுவில் 50 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண்ணும் இடம் பெற்றிருந்தார்.

குறித்த குழுவினர் மரக்கூட்டம் பகுதியில் சென்றபோது ஐயப்ப பக்தர்கள் குறித்த பெண்ணை அடையாளம் கண்டு கொண்டனர்.

உடனே அவர்கள் சபரிமலையின் ஐதீகத்தை குறித்த பெண்ணுக்கு எடுத்துக்கூறி சபரிமலையில் இருந்து திரும்பி செல்லுமாறு அறிவுரை கூறினார்கள். குறித்த பெண்ணும் அதை ஏற்று திரும்பிச் சென்றுள்ளார்.

சபரிமலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க நிலக்கல், பம்பை, மரக்கூட்டம் போன்ற இடங்களில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பத்தனம்திட்டா ரெயில் நிலையம், பஸ் நிலையம் பகுதிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!