‘பொள்ளாச்சி பாலியல் விவகாரம்’ – நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன்!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பாலியல் சம்பவத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை தொடர்புபடுத்தி பேசி இருந்தார். இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பினர். எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்று கடந்த 2 நாட்களுக்கு முன்னர் போலீஸ் விசாரணைக்கு அவர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று நக்கீரன் கோபாலின் வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்தார். நக்கீரன் கோபால் வெளியூரில் இருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் வருகிற 21-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று நக்கீரன் கோபால் விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

அதில் வருகிற 25-ந்தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நக்கீரன் பத்திரிகையில் வெளியான தகவல்களை மையமாக வைத்தே அவருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!