“விவசாயிகள் உயிரோடு இல்லை என தேர்தல் கமிஷன் நினைக்கிறதா..?” சீமான் சீற்றம்

மயில் சின்னம் கேட்டபோது, ‘உயிருடன் இருக்கும் சின்னத்தை தர முடியாது’ என மறுத்த தேர்தல் கமிஷன், தற்போது கரும்பு விவசாயி சின்னம் வழங்கியுள்ளது. அப்படியானால், விவசாயிகள் உயிரோடு இல்லை என தேர்தல் கமிஷன் நினைக்கிறதா..?” என, சீமான் கேள்வி எழுப்பினார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தனது கட்சியின் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர்,

“சமரசம் இல்லாத தலைவரையே நாங்கள் எதிர்பார்த்தோம் எனவே, கூட்டணிக்கு அழைத்தவர்களை புறக்கணித்தோம். ‘சரணடைந்து வாழ்வதை விட, சண்டையிட்டு சாவதே மேல்’ என்ற கொள்கையை நாங்கள் கொண்டதால், கூட்டணியை புறக்கணித்து தனித்து போட்டியிட முடிவெடுத்தோம்.

நாம் தமிழர் கட்சி 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இடைத் தேர்தலில், சரிபாதி உரிமை பெண் வேட்பாளர்களுக்கு வழங்குவோம். எதிர்வரும் 22 ஆம் திகதி விருப்ப மனுக்கள் பெறப்பட்ட பின்னர், எங்களுடைய வேட்பாளர்களை வரும் 23 ஆம் திகதி மயிலை மாங்கொல்லையில் வைத்து ஒட்டுமொத்தமாக அறிவிப்போம்.

நடைபெறும் லோக்சபா தேர்தலில், 20 ஆண் வேட்பாளர்களும், 20 பெண் வேட்பாளர்களும் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளனர். லோக்சபா மற்றும் சட்டமன்றத் தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை பெண் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என போராடி வரும் நாங்கள், எங்கள் கட்சி மூலம் அதை முதலில் கொண்டு வருவோம்.

நாங்கள் மயில் சின்னம் கேட்டிருந்தோம். ஆனால் தேர்தல் கமிஷன், ‘உயிருடன் இருக்கும் சின்னத்தை தர முடியாது’ என்றார்கள். ஆனால் தற்போது, ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது. அப்படியானால், விவசாயிகள் உயிரோடு இல்லை என தேர்தல் கமிஷன் நினைக்கிறதா..? விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்கவே எங்களுக்கு இந்த சின்னம் கிடைத்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

கோயில்களில் ஆடு, மாடுகளை பலி கொடுப்பதுபோல, நாட்டின் பாதுகாப்புக்காக போராடும் ராணுவ வீரர்களின் உயிரை அப்பட்டமாக பலி கொடுத்துள்ளது பா.ஜ.க அரசு. எத்தனையோ உயர்மட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு தெரியாமல் 1 கிலோ.மீட்டர் தூரம் வரை தீவிரவாதிகள் எவ்வாறு நுழைந்திருக்க முடியும்..? நாட்டின் ராணுவ வீரர்களையும், ரஃபேல் விமான கோப்புகளையும் பாதுகாக்க முடியாத அரசு, தன்னை நாட்டின் பாதுகாவலர்கள் என எப்படி கூறிக்கொள்ள முடியும்..?

சிறையில் உள்ள 7 தமிழர்களை எப்போதோ விடுதலை செய்திருக்க முடியும். அதற்கான திறன் மாநில அரசிடம் இருந்தும் ஆட்சியாளர்கள் வாய்திறக்கவில்லை, தற்போது, 7 தமிழர் விடுதலை பற்றி பேசுவது கண் துடைப்பு என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும்” என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!