மோடி இரும்பு மனிதர் அல்ல, கல் மனிதர்- திருவாரூர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவாரூரில் இன்று பிரச்சாரம் தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி இரும்பு மனிதர் அல்ல கல் மனிதர் என்று கடுமையாக சாடினார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையினை வெளியிட்ட முக ஸ்டாலின், இன்று திருவாரூரில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். முதலில் திருவாரூரில் உள்ள கழக தலைவர் கருணாநிதி வீட்டிற்கு சென்று ஆசிப்பெற்று, வீதிவீதியாக சென்று, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.

மறைந்த தலைவர் கருணாநிதியின் வசனங்களைக் குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கிய ஸ்டாலின் பேசியதாவது:-

திருவாரூர் தொகுதிக்கு பிரசாரத்திற்காக வர வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், தொகுதி மக்கள் நம்ம வீட்டுப்பிள்ளை நம்ம ஊருக்கு வரவில்லை என எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே முதலில் வந்தேன். ஜூன் 3ம் தேதி நம் கழக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த தினம் ஆகும். அன்று பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வண்டு விடும்.

மோடி இரும்பு மனிதர் அல்ல. கல் மனிதர். மத்தியில் இருக்கும் பாசிச மோடி அரசை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றோம்.

இந்தியாவில் கருப்புப் பணம் முற்றிலும் அழிக்கப்படும், இந்தியர்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என கூறியது என்னவாயிற்று? இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என கூறிய வாக்குறுதி என்ன ஆனது? இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்ததா?

மேலும் தமிழகத்திலே ஆட்சி புரிகின்ற இந்த அதிமுகவை நாம் தான் குற்றம் சாட்டவேண்டும் என்பது அல்ல. அவர்களின் செயல்களே போதும். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து, அவரது கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அவர்கள் இப்போது பதவியில் உள்ளனர். ஆனால், ஆதரவாக வாக்களித்த 18 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் அதிமுகவில், கூட்டணியில் இணைந்துள்ள இதர கட்சியினரும் அவர்களை எப்படியெல்லாம் பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அக்கட்சி 2, 3 ஆக உடைந்து விட்டது.

கழக தலைவரை ஈன்ற ஊர் இந்த ஊர். நம்முடைய தாய் தமிழ் மொழியை காத்திட வேண்டும் என இதே திருவாரூரில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார். இந்த திருவாரூர் தொகுதியில் தான், கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அவரை அமோக வெற்றி பெற வைத்தீர்கள். அந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே தலைவர் மு கருணாநிதி ஆவார்.

இதேபோல் தற்போது சகோதரர்கள் செல்வராசு மற்றும் பூண்டி கலைவாணன் ஆகியோரை மகத்தான வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!