கலப்பு விசாரணை, காலவரம்பு, கண்காணிப்பு செயலக கோரிக்கைகளை சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்காவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகம் ஒன்றை அமைக்கவும், தெளிவான காலவரம்புக்குட்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை அமைக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் நேற்று சமர்ப்பித்த விரிவான அறிக்கைக்குப் பதிலளித்து, சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார்.

இதன்போது அவர், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துலக நீதிபதிகளைக் கொண்ட பொறிமுறையை அமைப்பதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளையும் நிராகரித்தார்.

நாட்டின் அரசியலமைப்புப் படி, சிறிலங்காவின் குடியுரிமை கொண்டடிராத நீதிபதிகளை விசாரிக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

2015 ஆம் ஆண்டின் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையிலோ வேறு எந்த அதிகாரபூர்வ ஆவணங்களிலோ, சிறிலங்கா படையினருக்கு எதிராக போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான, எந்தவொரு நிரூபணமான குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

”சிறிலங்கா படையினர், பல நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீவிரவாத அமைப்புடனேயே போரிட்டனரே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் எதிராக போரிடவில்லை.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போன்ற கலப்பு நீதிப் பொறிமுறைக்கு, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்ப்பது, சட்ட மற்றும் அரசியலமைப்பு வரையறைகளுக்கு அமைய கடினமானது.

இலங்கையர் அல்லாத நீதிபதிகளை அத்தகைய நீதிப் பொறிமுறையில் உள்ளடக்க வேண்டுமாயின், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், பொதுவாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுடனும், அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!